Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

8 ஆண்டுகளுக்கு முன்பே இதை செய்திருந்தால் இந்திய குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்கலாமே? ஜிஎஸ்டி விவகாரத்தில் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி

சென்னை: 8 ஆண்டுகளுக்கு முன்பே ஜிஎஸ்டி வரிகுறைப்பை செய்திருந்தால் இந்திய குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்கலாமே? என ஜிஎஸ்டி விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: வரிக்குறைப்பாலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாயை சேமிக்கலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இதைத்தானே தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம். 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்திய குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே? மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்கிலிருந்துதான் செய்யப்படுகிறது.

இந்த உண்மையை ஒன்றிய அரசு மறைப்பதாலும் பாராட்ட மறுப்பதாலும் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகிறது. மற்றொரு புறம், ஒன்றிய பா.ஜ. அரசு மாநிலங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிதியைத் தர மறுத்து வருகிறது. இந்தி திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது. இந்த அநீதி எப்போது முடிவுக்கு வரும்? தங்கள் உரிமைகளைப் பாதுகாத்து, தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளை தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது. கூட்டாட்சிக் கருத்தியலுக்கு மதிப்பளியுங்கள், உரிய நிதியை விடுவியுங்கள், மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டியதை தந்து அவர்களைப் பயனடைய விடுங்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.