Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இந்திய சினிமாவின் மிக உயரிய விருது நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது: நாளை மறுநாள் பெறுகிறார்

புதுடெல்லி: இந்திய சினிமாவில் உயரிய விருதாக உள்ள தாதா சாகேப் பால்கே விருது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு வழங்கப்படுகிறது. தாதா சாகேப் பால்கே விருது ஆண்டுதோறும், சினிமாத்துறையில் சாதித்த கலைஞர்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும். 2023ம் ஆண்டுக்கான இந்த விருது, சிறந்த கலைச் சேவைக்காக மோகன்லாலுக்கு தரப்படுவதாக ஒன்றிய அரசு நேற்று அறிவித்தது. அதன்படி வரும் செவ்வாய்க்கிழமை (செப்.23) டெல்லியில் நடைபெறும் தேசிய திரைப்பட விருது விழாவில் மோகன்லாலுக்கு பால்கே விருது வழங்கப்பட உள்ளது.

மலையாளத்தில் பல ஹிட் படங்களில் நடித்த மோகன்லாலுக்கு 65 வயதாகிறது. தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படத்தில் நடித்தார். ரஜினியுடன் ‘ஜெயிலர்’, கமல்ஹாசனுடன் ‘உன்னைப் போல் ஒருவன்’, விஜய்யுடன் ‘ஜில்லா’, சூர்யாவுடன் காப்பான், ஜீவாவுடன் ‘அரண்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மொழிகளில் இதுவரை 361 படங்களில் மோகன்லால் நடித்துள்ளார்.

நடிப்பு தவிர, இயக்கம், தயாரிப்பு, பின்னணி பாடல் ஆகிய துறைகளிலும் மோகன்லால் பணியாற்றியுள்ளார். கடைசியாக 2022ம் ஆண்டுக்கான பால்கே விருதை இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பெற்றிருந்தார். 1969 முதல் வழங்கப்படும் இந்த விருது, இந்திய சினிமாவின் முன்னோடியாக திகழ்ந்த தயாரிப்பாளரும் இயக்குனருமான தாதா சாகேப் பால்கே நினைவாக ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் இந்த விருதினை இதுவரை 12 பேர் பெற்றுள்ளனர். 13வது தென்னிந்திய கலைஞராக மோகன்லால் விருது பெற உள்ளார்.

தாதாசாகேப் விருது பெறும் மோகன்லாலுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பதிவில், ‘‘பல்துறைகளில் சிறந்து விளங்கும் மோகன்லால் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். பல தசாப்தங்களாக மலையாள சினிமா மற்றும் நாடகத்துறையில் தனது சிறந்த படைப்புகளால் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.

தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் தனது முத்திரையை பதித்துள்ளார். தாதாசாகேப் பால்கே விருது பெறுவதற்கு வாழ்த்துக்கள். அவரது சாதனைகள் வரும் தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்’’ என்று பதிவிட்டுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

* தாதா சாகேப் பால்கே விருது பெற்ற தென்னிந்திய கலைஞர்கள்

பி.என்.ரெட்டி (1974).

எல்.வி.பிரசாத் (1982)

நாகிரெட்டி (1986)

நாகேஸ்வரராவ் (1990)

ராஜ்குமார் (1995)

சிவாஜி கணேசன் (1996)

அடூர் கோபாலகிருஷ்ணன் (2004)

வி.கே.மூர்த்தி (2008)

டி.ராமநாயுடு (2009)

கே.பாலசந்தர் (2010)

கே.விஸ்வநாத் (2016)

ரஜினிகாந்த் (2019)