புதுடெல்லி: டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பாளர் ஜோர்கன் ஆண்ட்ரூஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பென்டானில் போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையாக கண்டறியப்பட்ட இந்திய நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் கார்ப்பரேட் தலைவர்களின் விசாக்களை ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர்கள் எதிர்காலத்தில் விசாவுக்கு விண்ணப்பித்தால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இந்த நடவடிக்கையானது, அமெரிக்க குடியேற்ற மற்றும் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, விசா ரத்து செய்யப்பட்ட தனிநபர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்காவுக்குச் செல்லத் தகுதியற்றவர்கள் ஆகலாம்’ என கூறி உள்ளார். ஆனாலும் யாருடைய விசா ரத்து செய்யப்பட்டது என்பது தொடர்பான பெயர்கள் வெளியிடப்படவில்லை. இது தொடர்பாக ஒன்றிய அரசு தரப்பில் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. கடந்த 1960களில் மருத்துவ பயன்பாட்டிற்காக பென்டானில் வலி நிவாரணி மருந்து அமெரிக்காவின் அனுமதியக்கப்பட்டது.
இது ஒரு சக்திவாய்ந்த செயற்கை ஓபியாய்டு. ஆனால் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட பென்டானில் அமெரிக்காவில் மிகப்பெரிய போதைப்பொருள் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. பென்டானில் போதைப் பொருள் மெத்தபெட்டமைன், ஹெராயினை விட 50 மடங்கு சக்தி வாய்ந்தது. இதனால் அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் பென்டானில் மிகவும் பிரபலமாக உள்ளது. அதே சமயம் கடந்த ஓராண்டில் போதைப்பொருளால் 48,000 பேர் பலியாவதற்கு பென்டானில் காரணமாக இருந்துள்ளது.