நாம் எந்த உலகில் வாழ்கிறோம்?.. இந்திய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற தனது படத்தால் அதிர்ச்சி அடைந்த பிரேசிலிய மாடல் லாரிசா!!
டெல்லி: இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் தேர்தல்களில் மிகப்பெரிய அளவில் வாக்கு திருட்டு நடந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார். அரியானாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக நேற்று ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். அரியானா வாக்காளர் பட்டியலில் 25,41,144 போலி வாக்காளர்கள் உள்ளனர். தவறான வாக்காளர்கள், போலி முகவரிகள், கும்பல் வாக்காளர்கள் என ஏராளமான முறைகேடுகள் நிறைந்துள்ளன. பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி ஒருவரின் புகைப்படம் ராய் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் 10 வாக்குச்சாவடிகளில் 22 இடங்களில் இடம்பெற்று இருக்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தி கூறிய பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி குறித்து கடந்த 24 மணி நேரத்தில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூகுளில் தேடியுள்ளனர். அதில் அந்த பிரேசில் மாடல் அழகியின் பெயர் Larissa என தெரியவந்துள்ளது. இதனிடையே, இந்தியாவில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தி மோசடி செய்கிறார்களா? என பிரேசில் மாடல் அழகி லாரிசா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் அவர் கூறுகையில், என்னை இந்தியனாக காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள். இது பைத்தியக்காரத்தனம். நாம் எந்த உலகில் வாழ்கிறோம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
