வாஷிங்டன்: இந்திய பற்பசை சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்த கோல்கேட் நிறுவனம் தற்போது எதிர்பாராத விற்பனை சரிவை சந்தித்துள்ளது. 1806ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட கோல்கேட் நிறுவனம் 1937ல் இந்திய சந்தையில் கால் பதித்து இந்தியர்கள் மனதில் வலுவான இடத்தை பிடித்தது. 80 ஆண்டுகளாக இந்திய சந்தையில் கோலூன்றி வந்த கோல்கேட் தற்போது ஆட்டம் கண்டுள்ளது.
கோல்கேட்டின் விற்பனை தொடர்ச்சியாக 3 காலாண்டுகளாக சரிந்துள்ளது. நகர்ப்புறங்களில் தேவை குறைந்திருப்பதும் ஜிஎஸ்டி மாற்றங்கள் காரணமாக விநியோக சங்கிலியில் ஏற்பட்ட சிக்கல்கள் தான் சரிவுக்கு காரணம் என்று நிறுவனத்தின் சிஇஓ நோயல் வாலஸ் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கோல்கேட்டின் சந்தை பங்கு 58 சதவீதமாக இருந்தது.
தற்போது அது 42 சதவீதமாக குறைந்துள்ளது. அதே சமயம் ஆயுர்வேத பற்பசை நிறுவனங்களின் சந்தை வளர்ச்சி அடைந்துள்ளது. டாபர் மற்றும் பதஞ்சலி போன்ற போட்டியாளர்கள் கோல்கேட்டின் பங்கை கணிசமாக கைப்பற்றி வருகின்றனர். கோல்கேட்டிற்கு இந்தியா மிக முக்கியமான சந்தை. இந்தியாவில் மீண்டும் தனது இடத்தை வலுவாக்க தீவிர முயற்சிகளை கோல்கேட் முன்னெடுத்துள்ளது.
