Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய ரயில்வேயின் புதிய ரிசர்வேஷன் சிஸ்டம்; ஒரு நிமிடத்தில் 1,50,000 பேர் முன்பதிவு செய்யும் வசதி

சிறப்பு செய்தி

இந்திய ரயில்வேயின் புதிய பயணிகள் ரிசர்வேஷன் சிஸ்டத்தில் ஒரு நிமிடத்தில் 1.5 லட்சம் பேர் முன்பதிவு செய்யும் வசதி கொண்டுவரப்பட உள்ளது. இந்திய ரயில்வே அதன் 170 ஆண்டு வரலாற்றில் பயணிகள் ரிசர்வேஷன் முறையில் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சியை கொண்டுவர தயாராகி வருகிறது. 1987ல் கம்ப்யூட்டர் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறை தொடங்கியதில் இருந்து இதுவரை பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2002ல் ஐஆர்சிடிசி இணையதளம், பின்னர் மொபைல் ஆப் என டிஜிட்டல் புரட்சி தொடர்ந்தது. இன்று தினமும் சுமார் 12 லட்சம் பயணிகள் இணையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். அதிக நேரங்களில், குறிப்பாக, தட்கல் டிக்கெட் பதிவு நேரத்தில் சர்வர் பிரச்னைகள், மெதுவான பதிலளிப்பு, கம்ப்யூட்டர் செயலிழப்பு போன்ற தொல்லைகள் தொடர்ந்து வந்தன.

பண்டிகைக் காலங்களில் மற்றும் விடுமுறை சீசனில் இந்த பிரச்னைகள் இன்னும் மோசமானது. இந்நிலையில், டிசம்பர் 2025ல் புதிய பயணிகள் ரிசர்வேஷன் சிஸ்டம் ஒன்றை அறிமுகப்படுத்தும் பணியில் ரயில்வே நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதில், பல முக்கிய முன்னேற்றங்களை கொண்டு வரவுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் ஒரு நிமிடத்தில் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் பதிவு செய்யும் பெரும் திறன் கொண்டது. இப்போதுள்ள சிஸ்டம் ஒரு நிமிடத்தில் வெறும் 32,000 டிக்கெட்டுகள் மட்டுமே செயல்படுத்த முடிகிறது. புதிய சிஸ்டம் இதை விட 5 மடங்கு அதிகமான திறனை கொடுக்கும். இது, தட்கல் டிக்கெட் பதிவின்போது ஏற்படும் கூட்டம், தாமதம் மற்றும் சர்வர் பிரச்னைகளை முற்றிலும் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மேலும், டிக்கெட் தகவல் பார்க்கும் திறனிலும் அற்புதமான முன்னேற்றம் கொண்டு வரப்பட உள்ளது.

இப்போது, ஒரு நிமிடத்தில் 4 லட்சம் தகவல் கேள்விகள் மட்டுமே கையாள முடிகிறது. புதிய சிஸ்டம் இதை 10 மடங்கு அதிகரித்து ஒரு நிமிடத்தில் 40 லட்சம் தகவல் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும்.

இந்த தொழில்நுட்ப முன்னேற்றம் பயணிகளின் டிஜிட்டல் அனுபவத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். பல மொழி ஆதரவு, எளிய பயன்பாட்டு முறை, வேகமான பதிலளிப்பு நேரம் ஆகியவற்றுடன் வடிவமைக்கப்படும் இந்த சிஸ்டம் இந்திய ரயில்வேயை உலகளாவிய தரத்திற்கு உயர்த்தும். மேலும், புதிய சிஸ்டமில் எளிய பயன்பாட்டு முறை, பல மொழி ஆதரவு, பயணிகள் தங்களுக்கு பிடித்த இருக்கையை தேர்வு செய்யும் வசதி, மாதம் வாரியாக கட்டணங்களை காட்டும் நாட்காட்டி போன்ற புதிய அம்சங்கள் இருக்கும். மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், உடல்நல பிரச்னை உள்ளவர்கள் போன்ற சிறப்பு பிரிவினருக்கு தனியான வசதிகள் மற்றும் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

டிக்கெட் ரத்து செய்தால் கட்டணம் பாதி குறைப்பு?

புதிய ரிசர்வேஷன் சிஸ்டத்தில் மிக முக்கியமான நல்ல செய்தி உள்ளது. டிக்கெட் ரத்து செய்யும்போது தற்போது வசூலிக்கப்படும் கிளார்க் கேஜ் கட்டணங்களை குறைப்பது அல்லது முழுவதுமாக நீக்குவது குறித்து ரயில்வே அமைச்சகம் யோசித்து வருகிறது. இப்போது, ஏசி மற்றும் ஏசி இல்லாத டிக்கெட்டுகளுக்கு ரூ.60 மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளுக்கு ரூ.30 வசூலிக்கப்படுகிறது. இது காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கும், டிக்கெட் ரத்து செய்ய வேண்டிய அவசியம் உள்ள அனைவருக்கும் பெரும் நிவாரணமாக இருக்கும்.