Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய மரகதப் புறா (Chalcophaps indica indica)

மரகதப்புறாவின் துணை இனம் இந்திய மரகதப் புறா (Chalcophaps indica indica) ஆகும். மைனா அளவுள்ள இப்பறவை சுமார் 27 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு பவளச் சிவப்பாக இருக்கும். விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள் வெளிர் ஊதாவாகவும் இருக்கும். உடலின் மேற்பகுதி நல்ல மரகதப் பச்சையாக இருக்கும். தலை உச்சியும், கழுத்து, பின்பகுதி போன்றவை சாம்பல் நிறத்தில் இருக்கும். நெற்றி, புருவங்கள் போன்றவை வெண்மையாக இருக்கும். தோள்பட்டை இறக்கைகள் வெள்ளைப் பட்டையுடன் கூடிய சாம்பல் நிறமாக இருக்கும். வால் பழுப்பும் சாம்பல் நிறமும் கலந்து நல்ல கறுப்புப் பட்டையோடு காணப்படும். வாலின் கரும்பட்டை இடையிடையே துண்டுபட்டதுபோல சற்று இடைவெளியுடன் இருக்கும்.

இப்பறவை இந்தியா முதல் சீனா, மலேசியா, பிலிப்பைன்சு, இந்தோனேசியா, மேற்கு பப்புவான் தீவுகள் வரை காணப்படுகிறது. தென்னிந்தியாவில் பசுமை மாறாக் காடுகளிலும், ஈரம் மிக்க இலையுதிர் காடுகளில் காணப்படுகிறது. மேலும் மலை யடிவாரங்கள், மூங்கில் காடுகள், காட்டை ஒட்டிய நிலங்கள் போன்ற இடங்களிலும் இவற்றைக் காணலாம். 2000 மீட்டர் உயரம் வரை உள்ள மலைகளில் காணலாம். இவை தனித்தோ, ஆணும் பெண்ணும் என இணையாகவோ தரையில் அமர்ந்து இரை தேடக்கூடியவை. இது தானியங்களையும், காட்டுச் செடிகளின் பழங்களையும், கரையான் போன்றவற்றையும் உணவாக உட்கொள்ளும். இவற்றின் இனப்பெருக்கக் காலம் மார்ச் முதல் மே வரை ஆகும். இவை இரண்டு முதல் மூன்று மீட்டர் உயரத்தில் மரங்களில் குச்சிகள், புற்கள் போன்றவற்றைக் கொண்டு கூடு கட்டும். கூடுகள் பொதுவாக இலை மறைவில் கட்டும். கூட்டில் இரண்டு அல்லது மூன்று வெளிர் மஞ்சளான கிரீம் நிறம் கொண்ட முட்டைகளை இடும். 12 நாட்கள் அடைகாக்கும். ஆணும் பெண்ணும் இணைந்து அடைகாத்து குஞ்சுகளைப் பாதுகாக்கும்.