Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சென்னை வந்தடைந்தார்

சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சென்னை வந்துள்ளார். இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளார். இந்திய துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது.

இதில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். இவர்கள் 2 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. இதில் 2 பேரின் மனுக்களும் ஏற்று கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன், சுதர்சன் ரெட்டி 2 பேரும் தங்கள் கூட்டணி கட்சியின் தலைவர்களை சந்தித்து எம்பிக்களின் ஆதரவை திரட்ட தொடங்கியுள்ளனர். இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழ்நாட்டில் இருந்து ஆதரவை திரட்ட முடிவு செய்துள்ளார்.

இதற்காக அவர் இன்று காலை சென்னை வந்தடைந்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் தேநீர் விருந்து அளிக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது திமுக எம்பிக்கள் தனக்கு ஆதரவு அளிக்குமாறு சுதர்சன் ரெட்டி வேண்டுகோள் விடுக்க உள்ளார்.

மாலை 6 மணியளவில் திமுக கூட்டணி கட்சி தலைவர்களான காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எம்பிக்களுக்கு விருந்து அளிக்கிறார். தொடர்ந்து அவர்களின் ஆதரவை பெற உள்ளார்.