இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளாராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிப்பு
டெல்லி: இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளாராக ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுவார் என அறிவித்துள்ளார். டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக்கு பிறகு கார்கே அறிவித்துள்ளார். ஆந்திரா ஐகோர்ட் நீதிபதியாகவும் குவஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர்.
2007 முதல் 2011 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியில் இருந்தவர் சுதர்சன் ரெட்டி. இந்தியா கூட்டணியில் இல்லாத ஆம் ஆத்மி கட்சியும் சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். துணை ஜனாதிபதி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்கிறார். நாளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஜெகதீப் தன்கர் உடனலக்குறைவால் தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் யாரை வேட்பாளராக தேர்வு செய்யலாம் என்று மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அலுவலகத்தில் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக எம்.பி. கனிமொழி, சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ராம்கோபால் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முழு அதிகாரம் வழங்கி முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
நாளை மறுநாள் ஆகஸ்ட் 21 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி என்பதால், இன்று வேட்பாளரின் பெயரை வெளியிட இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளாராக ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுவார் என அறிவித்துள்ளார்.