Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியா உள்பட உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரிகள் ரத்து: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வாஷிங்டன்: இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு எதிராக அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானது என அமெரிக்க மேல்முறையீடு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது. இது அதிபர் டிரம்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி, கிட்டத்தட்ட தனது அனைத்து வர்த்தக கூட்டாளிகளுக்கு எதிராகவும் வரலாறு காணாத வரி விதித்தார். அதிகபட்சமாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 50 சதவீத பரஸ்பர வரி விதிக்கப்பட்டுள்ளது. டிரம்பிடம் பணிந்த சில நாடுகளுக்கு வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக உலக நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக வர்த்தக பற்றாக்குறையை கொண்டிருப்பதால், இது தேசிய அவசரநிலை என கருதி, 1977 சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் கீழ் இந்த வரிகளை டிரம்ப் விதித்துள்ளார்.

ஏப்ரல் 2ம் தேதி விதிக்கப்ட்ட இந்த பரஸ்பர வரி மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை ஆதரிப்பதற்காக சீனா, கனடா, மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளுக்கு எதிராக நியூயார்க் வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் வர்த்தக நீதிமன்றம், கடந்த மே மாதம் வழங்கிய தீர்ப்பில், அதிபருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை டிரம்ப் அதிகப்படியாக எடுத்துக் கொண்டுள்ளார் என்றும், உடனடியாக அவர் விதித்த வரிகளை குறைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இதை எதிர்த்து டிரம்ப் அரசு மேல்முறையீடு நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கு 11 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. அதில் 7 நீதிபதிகள் ஒரு தீர்ப்பையும், 4 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கினர். பெரும்பான்மையான நீதிபதிகள், நியூயார்க் வர்த்தக நீதிமன்ற தீர்ப்பை பெரும்பாலும் உறுதி செய்துள்ளனர். டிரம்ப் விதித்த அதிக வரிகள் சட்டவிரோதமானவை என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அதே சமயம், வரிகளை குறைக்க வேண்டுமென்ற முந்தைய தீர்ப்பின் சில அம்சங்கள் ஏற்கப்படவில்லை.

எனவே, டிரம்ப் விதித்த வரிகள் தற்போது உள்ளபடி தொடரும். இந்த தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வரும் அக்டோபர் 14ம் தேதிக்குள் மேல்முறையீடு செய்ய நீதிபதிகள் அவகாசம் அளித்துள்ளனர். இது அதிபர் டிரம்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. வரி எனும் ஆயுதம் மூலம் உலக நாடுகளை அதிபர் டிரம்ப் ஆட்டிப்படைக்கும் நிலையில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதன் தலைவிதியை நிர்ணயிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

* இறுதியில் வெல்லப் போவது அமெரிக்கா

நீதிமன்ற தீர்ப்பு குறித்து டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், ‘‘அனைத்து வரிகளும் இன்னும் நடைமுறையில் தான் உள்ளன. ஆனால், அமெரிக்கா தான் கடைசியில் வெல்லும் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். இந்த வரிகள் ரத்து செய்யப்பட்டால், அது நாட்டிற்கு பேரழிவாக இருக்கும்’’ என கூறி உள்ளார்.

* டிரம்பிடம் உள்ள மாற்று வழிகள்

உச்ச நீதிமன்றம் இந்த சட்டத்தை ரத்து செய்யும் பட்சத்தில், உலக நாடுகளுக்கு வரி விதிக்க டிரம்பிடம் 2 வழிகள் உள்ளன. 1974 வர்த்தக சட்டத்தின் மூலம் வர்த்தக பற்றாக்குறை உள்ள நாடுகளுக்கு எதிராக வரி விதிக்கலாம். ஆனால் 15 சதவீதத்திற்கு மேல் வரி விதிக்க முடியாது. அதுவும் 150 நாட்களுக்கு அதிகமாக வரியை நீட்டிக்கவும் முடியாது. 1962 வர்த்தக விரிவாக்க சட்டத்தின் மூலம் வரி விதிக்கலாம். இந்த சட்டத்தின் மூலம் தான் இரும்பு, அலுமினியம், ஆட்டோமொபைல் பொருட்களுக்கு டிரம்ப் தனியாக வரி விதித்துள்ளார். தனது முதல் பதவிக்காலத்தில் சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளுக்கும் இந்த சட்டம் தான் பயன்பட்டது. ஆனால் இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வணிக துறையின் விசாரணை தேவை. எனவே உடனடியாக எதுவும் செய்ய முடியாது. இந்த சட்டத்திற்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ளன. அனைத்து நாட்டிற்கு எதிராகவும் இதை பயன்படுத்துவது சாத்தியமற்றது.

* விரைவாக நாடு கடத்தவும் தடை

கடந்த ஜனவரி மாதம் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதும், அமெரிக்காவில் 2 ஆண்டுக்கும் குறைவாக இருக்கும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரையும் விரைவாக நாடு கடத்தும் திட்டத்தின் கீழ் கொண்டு வந்தார். அதற்கு முன், எல்லையில் இருந்து 100 மைல் தொலைவில் தடுத்து நிறுத்தப்பட்டவர்கள் மற்றும் 14 நாட்களுக்கும் குறைவாக அமெரிக்காவில் தங்கியிருந்தவர்கள் மட்டும் விரைவாக நாடு கடத்தப்பட்டனர். இதில், ஆவணமின்றி சிக்குபவர்கள் நீதிபதி விசாரணையின்றி நாடு கடத்தப்படுவார்கள். இதை எதிர்த்த வழக்கில் வாஷிங்டன் மாவட்ட நீதிபதி ஜியா கோப் நேற்று முன் தினம் தற்காலிக தடை உத்தரவு பிறப்பித்தார்.

* வழக்கில் டிரம்ப் தோற்றால் அமெரிக்கா கஜானா காலி

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கில் அதிபர் டிரம்ப் தோற்கும் பட்சத்தில், அமெரிக்கா மிகப்பெரிய நிதி நெருக்கடிக்குள்ளாகும். இதுவரை உலக நாடுகளிடம் வசூலித்த வரிகள் அனைத்தையும் திருப்பி தர வேண்டியிருக்கும். கடந்த ஜூலை மாதம் மட்டும் ரூ.13.5 லட்சம் கோடி வரி மூலம் வருவாய் கிடைத்துள்ளது. இது 2 மடங்குக்கும் அதிகமான வரி. எனவே, சில மாதங்களுக்கு பிறகு தீர்ப்பு வெளியாகும் பட்சத்தில் பல லட்சம் கோடி பணத்தை அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு திரும்பி தர வேண்டியிருக்கும். இது அமெரிக்காவின் கஜானாவையே காலியாக்கி, அமெரிக்கர்களை நிலைகுலையச் செய்யும் என நீதித்துறை எச்சரித்துள்ளது. அதுமட்டுமின்றி, வழக்கில் டிரம்ப் தோற்றால் அதன் பிறகு எந்த உலக நாடுகளும் அதிக வரிகளை ஏற்காது. அவருடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மறுபரிசீலனை செய்ய சம்மந்தப்பட்ட நாடுகள் நெருக்கடி தரும்.