3வது ஓடிஐயில் இணைந்த கைகள்: தென் ஆப்ரிக்காவை துவம்சம் செய்த ஜெய்ஸ்வால், ரோகித், கோஹ்லி; தொடரை வென்று சாதித்த இந்தியா
விசாகப்பட்டினம்: தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையிலான 3வது ஒரு நாள் போட்டி, விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்ரிக்கா அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான ரையான் ரிக்கெல்டன், அர்ஷ்தீப் சிங்கின் துல்லிய பந்து வீச்சில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் குவின்டன் டிகாக், கேப்டன் டெம்பா பவுமா சிறப்பாக ஆடி 2வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் குவித்தனர். டிகாக் 106 ரன்னிலும், பவுமா 48 ரன்னிலும் அவுட்டாகினர். மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால், 47.5 ஓவரில் தென் ஆப்ரிக்காவின் இன்னிங்ஸ் 270 ரன்களில் முடிவுக்கு வந்தது.
இந்தியா தரப்பில் பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் தலா 4 விக்கெட் சாய்த்தனர். பின்னர், இந்திய அணியின் துவக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும், தென் ஆப்ரிக்காவின் பந்துகளை துவம்சம் செய்து ரன் வேட்டையாடினர். இந்த இணை 155 ரன் குவித்த நிலையில் ரோகித் 75 ரன்னில் (73 பந்து, 3 சிக்சர், 7 பவுண்டரி) அவுட்டானார். பின் ஜெய்ஸ்வால் (121 பந்து, 2 சிக்சர், 12 பவுண்டரி, 116 ரன்) - விராட் கோஹ்லி (45 பந்து, 3 சிக்சர், 6 பவுண்டரி, 65 ரன்) இணை சேர்ந்து கடைசி வரை அவுட்டாகாமல், தென் ஆப்ரிக்கா வீரர்களின் பந்துகளை வெளுத்து வாங்கி ரன் வேட்டையாடினார். அதனால், 39.5 ஓவரில் இந்தியா ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 271 ரன் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
* 21வது போட்டியில் டாஸில் பாஸ்
தென் ஆப்ரிக்கா உடனான நேற்றைய ஒரு நாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்றது. 20 போட்டிகளில் தொடர்ச்சியாக டாஸில் தோற்ற இந்தியா, 21வது போட்டியில் டாஸில் வென்று, டாஸ் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
* ரோகித் 20000 ரன்
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா நேற்று 75 ரன் குவித்தார். இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் கடந்த 4வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அவரது தற்போதைய ஸ்கோர், 20,048. இப்பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி, ராகுல் டிராவிட் முதல் 3 இடங்களில் உள்ளனர்.


