Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவின் வரிவிதிப்பு மிரட்டல்; யாருக்கும் இந்தியா அடிபணியாது: ஒன்றிய அமைச்சர் திட்டவட்டம்

புதுடெல்லி: சர்வதேச வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியில், யாருக்காகவும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது என ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் கொள்முதல் செய்வதால், இந்தியப் பொருட்கள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி விதிப்பது போன்ற நெருக்கடிகள் அமெரிக்கா தரப்பில் கொடுக்கப்படும் நிலையில், ஒன்றிய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பேட்டியில், ‘இன்றைய இந்தியா மிகவும் வலிமையான, தன்னம்பிக்கை மிக்க நாடாகத் திகழ்கிறது. யாருக்காகவும் நாங்கள் அடிபணிய மாட்டோம்.

ஐரோப்பிய வர்த்தகக் கூட்டமைப்பான எப்டா நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, ‘4 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்; உலகில் வேகமாக வளரும் நாடு; எங்களிடம் இளைஞர் சக்தி உள்ளது’ என்று தெரிவித்தோம். அதன் விளைவாக, அந்த நாடுகள் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம் வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும்’ என்று அவர் கூறினார். மேலும் அவர் பேசுகையில், ‘இந்தியப் பொருளாதாரம் செத்துவிட்டது என்று கூறிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு மூத்த தலைவரின் பேச்சு வெட்கக்கேடானது.

நாட்டின் மாபெரும் வளர்ச்சிப் பாதையை இழிவுபடுத்தும் அவரது கருத்துகளுக்காக நாடு அவரை மன்னிக்காது. இன்று இந்தியாவின் நாணயம், அந்நியச் செலாவணி கையிருப்பு, பங்குச் சந்தைகள் என அனைத்தும் வலுவாக உள்ளன. உலக வளர்ச்சிக்கு 16 சதவீத பங்களிப்பை இந்தியா வழங்கி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் எனப் பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்’ என்றார்.