கோவை: 2047-ல் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வளர்ந்த நாடாக மாறும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் டாக்டர் நாராயணன் பேசியதாவது: தகவல் தொழில்நுட்ப துறையில் இந்தியா சிறந்து விளங்கி வருகிறது. நம் செயற்ைககோள் மூலம் மீனவர்களுக்கு எங்கு மீன் கிடைக்கும், எப்போது கடலுக்கு செல்ல வேண்டும் என்பன போன்ற தகவல் அவர்களின் மொழியில் அளிக்கப்படுகிறது. இதனால், 9 லட்சம் இந்திய மீனவர்கள் பயனடைகின்றனர். அவர்களுக்கு வருடத்திற்கு ரூ.34 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது.
நிலவில் சிறந்த புகைப்படம் எடுக்கும் கேமரா தொழில்நுட்பம் இந்தியாவிடம்தான் உள்ளது. ராக்கெட் இன்ஜின் டெக்னாலஜியில் சிறந்து விளங்கி வருகிறோம். அதன்படி, இந்தியா இன்ஜின் சோதனையை 28 மாதங்களில் செய்தது, விரைவாக செலுத்தியது மற்றும் ஸ்டேஜ் லெவல் டெஸ்ட் விரைந்து முடித்தது போன்ற 3 உலக சாதனையை செய்துள்ளது. இந்த சாதனையை மற்ற நாடுகளால் முறியடிக்க முடியாது. இஸ்ரோ, கடந்த மாதம் நிசார் செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது. இஸ்ரோவின் 56 செயற்கை கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன. எல்விஎம் 3 ராக்கெட் விரைவில் விண்ணில் செலுத்தப்படும்.
இது விண்வெளிக்கு மனிதர்களை அழைத்து செல்லும் திட்டத்திற்கு பயன்படும். வரும் 2035ம் ஆண்டிற்குள் இஸ்ரோ அதன் சொந்த விண்வெளி நிலையத்தை விண்வெளியில் உருவாக்கும். 2040-ல் விண்வெளி துறையில் இந்தியா முதன்மை நாடாக மாறும். 2047-ல் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வளர்ந்த நாடாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.