லாகூர்: இந்தியா திறந்து விட்ட தண்ணீரால் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 22 பேர் பலியானார்கள். இந்தியாவில் பெய்து வரும் கனமழையால் பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு இந்தியா தகவல் தெரிவித்தது. வேகமாக நிரம்பி வழியும் மதோபூர் அணையிலிருந்து ரவி நதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மேலும் செனாப் நதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் வெள்ளத்தில் சிக்கியது. செனாப் நதி வெள்ளம் காரணமாக 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். ரவி நதி வெள்ளத்தால் சுமார் 80 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை சுமார் 11,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
சட்லஜ் நதி நிரம்பி வழிவதால் மொத்தம் 361 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை கிட்டத்தட்ட 127,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாகாணம் முழுவதும் குறைந்தது 1,700 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மிக அதிக வெள்ளத்தால் இதுவரை 22 பேர் பலியாகி உள்ளனர்.