மும்பை: 13வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். நேற்று நடந்த போட்டியில் தென்ஆப்ரிக்கா 150 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 10 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. தென்ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்ட நிலையில் , ஒரு இடத்திற்கு இந்தியா, நியூசிலாந்து இடையே கடும் போட்டி உள்ளது. இதில் இந்தியா நாளை நியூசிலாந்துடன் மோதுகிறது. மும்பை டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி நாளை மாலை 3 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.
முதல் 2 போட்டியில் இலங்கை, பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா அடுத்த 3 போட்டியில் தென்ஆப்ரிக்கா,ஆஸ்திரேலியா, இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. இதனால் நாளை வாழ்வா, சாவா நிலையில் களம் இறங்குகிறது. நாளை ஒருவேளை தோற்று கடைசிபோட்டியில் 26ம் தேதி வங்கதேசத்தை வீழ்த்தினால் ரன் ரேட் சிக்கலில் மாட்டிக்கொள்ளும். ரன்ரேட் பிளசாக இருப்பது சாதகமாக இருக்கிறது. நியூசிலாந்து இந்தியாவை நாளை வீழ்த்தி, கடைசி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தினால் அந்த அணி எந்த சிக்கலும் இன்றி 8 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்துவிடும். எனவே நாளைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும். இரு அணிகளும் இதற்கு முன் 57 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 34ல் நியூசிலாந்து, 23 இந்தியா வென்றுள்ளது.