இந்தியா - அமெரிக்கா பேச்சுவார்த்தை வர்த்தக போருக்கு முற்றுப்புள்ளி வருமா..? விரைவில் கையெழுத்தாக வாய்ப்பு
புதுடெல்லி: வர்த்தகப் பதற்றங்களுக்கு இடையே இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. ரஷ்யாவிடமிருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரை இறக்குமதி வரி விதித்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பதற்றம் ஏற்பட்டதுடன், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த ஆறாவது சுற்று அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தையும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தச் சூழலில், பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சமீபத்தில் தொலைபேசியில் உரையாடியதைத் தொடர்ந்து இருதரப்பு உறவில் இணக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இருப்பினும், இந்தியாவின் விவசாயம் மற்றும் பால்வளத் துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிப்பது தொடர்பான முக்கியத் தடைகள் இன்னும் நீடிக்கின்றன.
இந்நிலையில், டெல்லியில் ேநற்று இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமெரிக்காவின் சார்பில் வர்த்தகப் பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழுவும், இந்தியாவின் சார்பில் வர்த்தகத் துறை சிறப்புச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் நேர்மறையாகவும், முன்னோக்கியும் இருந்ததாக இருதரப்பும் அறிக்கை வெளியிட்டுள்ளன.
இருதரப்புக்கும் நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. அமெரிக்கக் குழு நாடு திரும்பியதும், காணொலி வாயிலாகப் பேச்சுவார்த்தைகள் தொடரும் எனவும், அடுத்தகட்ட நேரடிப் பேச்சுவார்த்தைக்கான தேதி பின்னர் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக அமெரிக்கா, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.