டெல்லி: இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தகம் தொடர்பான பேச்சு டெல்லியில் நாளை நடைபெறுகிறது. உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவுக்கு நிதி செல்வதை தடுக்கும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் மீது அமெரிக்கா பொருளாதார அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியப் பொருட்கள் மீது ஏற்கனவே இருந்த 25 சதவீத வரியை இரட்டிப்பாக்கி, 50 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை நியாயமற்றது எனக் கூறி இந்தியா நிராகரித்திருந்தது. ஆனாலும், சமீப காலமாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்யின் அளவு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தகம் தொடர்பான பேச்சு டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்த பிறகு முதல்முறையாக வர்த்தக பேச்சு நடைபெறுகிறது. பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க வர்த்தகத் துறை அதிகாரிகள் நாளை டெல்லி வர உள்ளனர். ஒன்றிய வர்த்தக அமைச்சக சிறப்புச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளார். ஏற்கனவே ஆக.25ல் நடக்க இருந்த வர்த்தக பேச்சு, அமெரிக்கா 50% வரி விதித்ததால் ஒத்திவைக்கப்பட்டது.