Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இந்தியாவுடன் ஒற்றுமையாக இருப்பீர்களா? அதிபர் டிரம்பின் கேள்வியால் தர்மசங்கடமான பாக். பிரதமர்: காசா அமைதி மாநாட்டிலும் ஜால்ரா

ஷர்ம் எல் ஷேக்: எகிப்தில் நடந்த காசா அமைதி மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘இந்தியாவுடன் ஒற்றுமையாக இருப்பீர்கள் என நம்புகிறேன்’ என்றதும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தர்மசங்கடத்துடன் சிரித்தார். காசாவின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 2 ஆண்டாக நடந்த போர், அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்தியஸ்தம் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, காசாவின் எதிர்காலம் தொடர்பாக எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் அமைதி மாநாடு நேற்று நடந்தது.

இதில், ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கை சேர்ந்த 30 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டில், காசாவின் மறுகட்டமைப்புக்கு உதவுவதாக உறுதி அளித்த அதிபர் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் அதுதொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட்டனர். அப்போது பேசிய அதிபர் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தை குறிப்பிட்டார். பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிரை தனக்கு பிடித்தமான பீல்டு மார்ஷல் என புகழ்ந்தார். ஏற்கனவே அவருக்கு வெள்ளை மாளிகையில் விருந்தளித்துள்ளார் டிரம்ப்.

அதுமட்டுமின்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்பாக பிரதமர் மோடியை புகழ்ந்தார். டிரம்ப் பேசுகையில், ‘‘இந்தியா சிறந்த நாடு, அங்கு தலைமை பதவியில் எனது மிகவும் நல்ல நண்பர் உள்ளார். அவர் அற்புதமான வேலையை செய்தார்’’ என இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் பற்றி கூறினார். பின்னர் டிரம்ப், தனக்கு பின்னால் நின்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெரீபை பார்த்து, ‘‘இனி இந்தியாவும் பாகிஸ்தானும் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு இருக்கும் என நம்புகிறேன், சரியா?’’ என கேள்வி கேட்டார்.

அதற்கு பிரதமர் ஷெரீப் தர்மசங்கடத்துடன் சிரித்தபடி தலையை திருப்பிக் கொண்டார். பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் பேசுகையில், ‘‘தெற்காசியாவில் மட்டுமல்ல மத்திய கிழக்கிலும் பல போர்களை நிறுத்தி லட்சக்கணக்கான மக்களின் உயிரை நீங்கள் காப்பாற்றி உள்ளீர்கள். அதற்காக மீண்டும் ஒருமுறை நோபல் பரிசுக்கு உங்கள் பெயரை பரிந்துரைக்க விரும்புகிறேன்’’ என டிரம்புக்கு ஓவராக ஐஸ் வைத்து பேசினார்.

இதற்கிடையே, இந்தியா மீது எப்போதும் வெறுப்பை கக்கும் பாகிஸ்தான் ராணுவ தளபதியை டிரம்ப் புகழ்ந்ததன் மூலம், டிரம்புக்கும் மோடிக்கும் இடையே என்ன மாதிரியான நட்பு இருக்கிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். ‘‘மோடி தலைமையிலான இந்தியாவுடன் உலகம் துணை நிற்கவில்லை. இந்தியாவை குறிவைப்பவர்களை அது ஆதரிக்கிறது. ஆனால் இந்தியா வலுவடைந்ததாக மோடி கூறுகிறார். இது வலுவல்ல, பேரழிவு’’ என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார்.