இந்தியாவுக்கு எதிராக அவதூறு பரப்பிய டிரம்ப் ஆலோசகர்; மூக்கை உடைத்தது எலான் மஸ்கின் ‘எக்ஸ்’ தளம்; அமெரிக்காவின் இரட்டை வேடம் அம்பலம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசகரின் இந்தியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை, சமூக வலைதளமான ‘எக்ஸ்’ உண்மைகளை அடுக்கி முறியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவரோ, தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிராகப் பேசி வருபவர் ஆவார். இவர் இந்தியாவை ‘வரிகளின் மகாராஜா’, ‘கிரெம்ளினின் (ரஷ்யா) சலவையகம்’ என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
உக்ரைன் போரை ‘மோடியின் போர்’ என்றும், ‘இந்திய மக்களின் உழைப்பைச் சுரண்டி பிராமணர்கள் லாபம் ஈட்டுகின்றனர்’ என்றும் கூறி சர்ச்சைகளைக் கிளப்பினார். மேலும், ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, இந்தியப் பொருட்களின் இறக்குமதி மீது கூடுதலாக 25% வரி விதித்து, மொத்த வரியை 50% ஆக உயர்த்தியதிலும் இவரது பங்கு முக்கியமானது. இந்தியாவின் இறையாண்மையில் தலையிடும் வகையிலான இவரது கருத்துக்களை ஒன்றிய அரசு தொடர்ந்து நிராகரித்து வந்தது.
இந்த பின்னணியில், தற்போது தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில், ‘ரஷ்யாவிடம் இருந்து லாபத்திற்காக மட்டுமே இந்தியா எண்ணெய் வாங்குகிறது. அந்த வருவாய் ரஷ்யாவின் போர் இயந்திரத்திற்கு எரிபொருளாகிறது. இதனால் உக்ரைனியர்களும், ரஷ்யர்களும் இறக்கின்றனர். அமெரிக்க வரி செலுத்துவோர் பாதிக்கப்படுகின்றனர்’ என்று பதிவிட்டிருந்தார். இவ்வாறு கருத்து பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே எலான் மஸ்கின் ‘எக்ஸ்’ தளம், அந்தப் பதிவில் உண்மை சரிபார்ப்பு குறிப்பு ஒன்றை இணைத்தது. அதில், ‘இந்தியா லாபத்திற்காக இன்றி, தனது தேசிய எரிசக்தி பாதுகாப்பிற்காகவே ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குகிறது. இதில் எந்தவொரு சர்வதேசத் தடைகளையும் மீறவில்லை.
மேலும், அமெரிக்காவே ரஷ்யாவிடம் இருந்து யுரேனியம் போன்ற கனிமங்களை இறக்குமதி செய்வது அதன் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பீட்டர் நவரோ, ‘எலான் மஸ்க் தனது தளத்தில் பிரசாரத்தை பரப்புகிறார்’ என்று கடுமையாகத் தாக்கி மீண்டும் பதிவிட்டார். உடனடியாக அந்தப் பதிவிற்கும் ‘எக்ஸ்’ தளம் பதிலடி கொடுத்தது. இந்தியாவின் வர்த்தகம் அதன் இறையாண்மை மிக்க முடிவு என்றும், அது சர்வதேச சட்டத்தை மீறவில்லை என்றும் மீண்டும் அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை சுட்டிக்காட்டியது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘பீட்டர் நவரோவின் தவறான கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கிறோம்’ என்று பதிலளித்துள்ளார்.