லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்டின் முதல் இன்னிங்சில், இங்கிலாந்து, 48 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 242 ரன் எடுத்திருந்தது. இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையே, கடைசி டெஸ்ட், நேற்று முன்தினம் லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கியது. முதலில் ஆடிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன் எடுத்தது. நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்தியா, கடைசி 6 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அதனால், 224 ரன்னுக்கு இந்தியா ஆல் அவுட்டானது.
அதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக ஆடி நல்ல துவக்கத்தை தந்தனர். ஸ்கோர் 92 ஆக இருந்தபோது, முதல் விக்கெட்டாக, பென் டக்கெட் (43 ரன்) ஆட்டமிழந்தார். அதன் பின், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. 48 ஓவர் முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழந்து 242 ரன் எடுத்து, 18 ரன்கள் முன்னிலை பெற்றபோது, மழையால் ஆட்டம் தடைபட்டது. இந்திய தரப்பில், பிரசித் கிருஷ்ணா 4, முகம்மது சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினர்.
* 3வது அதிவிரைவு 100 ரன்
இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்டின் முதல் இன்னிங்சில், இங்கிலாந்து 14.4 ஓவரில் 101 ரன்களை குவித்தது. இது, இந்தியாவுக்கு எதிராக குவிக்கப்பட்ட, 3வது அதிவிரைவு சதமாக உருவெடுத்தது. இதற்கு முன், கடந்த 2011-12ல், இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி, 14 ஓவரில் 100 ரன் குவித்து முதலிடம் வகிக்கிறது. கடந்த 2007ல் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக, வங்கதேசம் அணி, 14.1 ஓவரில் 100 ரன் எடுத்து 2ம் இடம் வகிக்கிறது.
* 8வது முறையாக 50+ ரன்கள்
இந்தியாவுக்கு எதிரான முதல் இன்னிங்சில், இங்கிலாந்து துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி - பென் டக்கெட் இணை, 8வது முறையாக 50க்கு கூடுதலாக ரன்களை குவித்தனர். இதன் மூலம், வெஸ்ட் இண்டீசின் கார்டன் கிரீனிட்ஜ் - டெஸ்மாண்ட் ஹெயின்ஸ் இணையின் 8 அரை சதங்கள் சாதனையை சமன் செய்துள்ளனர். மேலும், கிராவ்லி - டக்கெட் இணை, 7 ஓவர்களில் 51 ரன்களை விளாசி சாதனை படைத்தது. இதற்கு முன், கடந்த 2011-12ல், இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 7 ஓவர்களில் 51 ரன்களை குவித்து படைத்த அதிவிரைவு அரை சத சாதனையை இவர்கள் சமன் செய்துள்ளனர்.