மான்செஸ்டர்: இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 107 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 458 ரன் எடுத்திருந்தது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. கடந்த 23ம் தேதி, மான்செஸ்டரில் துவங்கிய 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி, 358 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பின்னர், முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழந்து 225 ரன் எடுத்திருந்தது. நேற்று, 3ம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து தொடர்ந்தது.
ஜோ ரூட், ஒல்லி போப் இணை, 3வது விக்கெட்டுக்கு 144 ரன் குவித்திருந்தபோது ஒல்லி போப் (71 ரன்) ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ஹேரி புரூக் (3 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தார். பின் இணை சேர்ந்த ஜோ ரூட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஜோ ரூட் 178 பந்துகளில் சதம் விளாசினார். 107 ஓவர் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழந்து 458 ரன் எடுத்து, 100 ரன் முன்னிலையுடன் வலுவான நிலையில் இருந்தது. ஜோ ரூட் 132 ரன், பென் ஸ்டோக்ஸ் 46 ரன் எடுத்து களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 2, அன்சுல் கம்போஜ், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
38வது சதம் விளாசி ஜோ ரூட் சாதனை;
இந்தியாவுடனான 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (34) அபாரமாக ஆடி, 38வது சதம் விளாசினார். ஜோ ரூட், 120 ரன்களை எட்டியபோது, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவரது மொத்த ரன் 13,379 ஆக உயர்ந்தது. இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2வது அதிக ரன் எடுத்த வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்தார். நேற்றைய சதம் மூலம், ஜோ ரூட், அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் தனக்கு மேலே இருந்த, ராகுல் டிராவிட் (13,288 ரன்), ஜாக் காலிஸ் (13,289 ரன்), ரிக்கி பான்டிங் (13,378) ஆகியோரை பின்னுக்கு தள்ளி 2ம் இடத்தை பிடித்தார். இப்பட்டியலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், 15,921 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில், இலங்கை வீரர் சங்கக்கராவுடன் (38 சதம்) சேர்ந்து 4ம் இடத்தை ஜோ ரூட் பகிர்ந்து கொள்கிறார். இப்பட்டியலில் டெண்டுல்கர் (51 சதம்) முதலிடத்திலும், ஜேக்கஸ் காலிஸ் (45 சதம்), ரிக்கி பான்டிங் (41 சதம்) 2 மற்றும் 3வது இடங்களில் உள்ளனர்.