பிரிஸ்பேன்: இந்தியா மகளிர் ஏ அணியுடனான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸி மகளிர் ஏ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மகளிர் ஏ கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கு நடக்கும் அதிகாரப்பூர்வமற்ற 4 நாள் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆடியது. கடந்த 21ம் தேதி துவங்கிய இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 299 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
பின்னர், முதல் இன்னிங்சை ஆடிய ஆஸி மகளிர் ஏ அணி, 305 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 3ம் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில், நேற்று 4ம் நாளில், 2வது இன்னிங்சை இந்தியா தொடர்ந்தது. ஜோஷிதா 9 ரன்னிலும், சைமா தாக்கூர் 6 ரன்னிலும் அவுட்டானதை அடுத்து, 286 ரன்னுடன் 2வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
அதையடுத்து, 281 ரன் வெற்றி இலக்குடன் ஆஸி வீராங்கனைகள் களமிறங்கினர். துவக்க வீராங்கனைகள் ரேச்சல் ட்ரெனமேன் (64 ரன்), கேப்டன் தஹ்லியா வில்சன் (46 ரன்) அற்புதமாக ஆடி சிறப்பான துவக்கத்தை தந்தனர். பின் வந்த மேட்டி டார்க் 68 ரன், அனிகா லீராய்ட் 72 ரன் விளாசி அணியை வலுவான நிலைக்கு இட்டுச் சென்றனர். 85.3 ஓவரில் ஆஸி அணி, 4 விக்கெட் இழப்புக்கு 283 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.