Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவில் தொழில் தொடங்க தமிழ்நாடுதான் சிறந்தது என்பதை அடையாளப்படுத்த வேண்டும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைத்தல், தொழில் முதலீடுகள், நிலம் கையகப்படுத்துதல் பணி முன்னேற்றம் மற்றும் தொழில் பூங்காக்களில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்துதல் தொடர்பாக, அனைத்து சிப்காட் தொழிற் பூங்காக்களின் திட்ட அலுவலர்கள், தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் (நில எடுப்பு) மற்றும் பொறியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் நேற்று சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது: இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டும் என்றால் தமிழ்நாடுதான் சிறந்தது என்பதை அடையாளப்படுத்த வேண்டும். தொழில் தொடங்குவதற்கான முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு இருக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் இந்தத் துறையை தனது கண்காணிப்பில் வைத்துள்ளார். தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான தகுந்த இடங்களை ஆய்வு செய்ய வேண்டும். சிப்காட் வளாகங்கள் இல்லாத மாவட்டங்களில் புதிதாக சிப்காட் வளாகங்கள் அமைக்கப்பட வேண்டும். முதல்வரின் அறிவிப்புகள், சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வரும் திட்டங்களை விரைந்து முடித்திட அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் வசதிக்காக சிப்காட் BIZ BUDDY HELPLINE: 9894322233 ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாதந்தோறும் முதல் திங்கள்கிழமை நடத்தப்பட்டு வந்த முதலீட்டாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இனி மாதந்தோறும் இரண்டாவது வெள்ளிக்கிழமை நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசினார். இக்கூட்டத்தில் சிப்காட் மேலாண்மை இயக்குநர் செந்தில் ராஜ், சிப்காட் செயல் இயக்குநர் சிநேகா, சிப்காட் திட்ட அலுவலர்கள், தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் (நில எடுப்பு) மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.