இந்தியாவிலேயே எஸ்.ஐ.ஆரை ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுக: ராஜ விசுவாசத்தை காட்ட வழக்கு போடுவது வெட்கக்கேடு; எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சர் ரகுபதி தாக்கு
சென்னை: அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழர்களின் வாக்குரிமை காப்பாற்றப்பட வேண்டும் எனத் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடங்கி, உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவது வரை திமுக போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதிமுகவோ எஸ்.ஐ.ஆர்-ஐ ஆதரித்து வழக்கு தொடருந்திருக்கிறது. பாஜவின் வாக்கு திருட்டு வியூகம் அதிமுகவுக்குப் பயன்படும் என்ற நப்பாசையில் எஸ்.ஐ.ஆர்-ஐ ஆதரிக்கிறார் பழனிசாமி. முஸ்லிம்களை பாதிக்கும் வகையில் மோடி அரசு கொண்டு வந்த சிஏஏ சட்டத்தை ஆதரித்துவிட்டு, ’’முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை” எனப் பச்சைப் பொய் சொன்ன பழனிசாமிதான், அந்த சிஏஏ சட்டத்தை எஸ்.ஐ.ஆர் வழியாக அமல்படுத்தத் துடிக்கும் பாஜவுக்குத் துணை போகிறார்.
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையால் தமிழர்களின் வாக்குரிமைக்கு மட்டுமல்ல; அவர்களின் குடியுரிமைக்கே ஆபத்து ஏற்படலாம் என்கிற பேராபத்து சூழ்ந்திருக்கிறது. வேளாண் சட்டம், உதய் மின் திட்டம், மதுரை அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கப் பிரச்சினைக்கு காரணமான மைன்ஸ் அண்ட் மினரல் திருத்தச் சட்டம், குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட பாஜ ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்டங்களையும் திட்டங்களைக் கண்களை மூடி ஆதரித்து, சிறந்த அடிமையாக விளங்கி வரும் எடப்பாடி பழனிசாமி, தற்போது எஸ்.ஐ.ஆர் -லும் ’ஆலம்பனா நான் உங்கள் அடிமை’ என முன்னுக்கு வந்து நிற்கிறார்.
பீகாரில் எஸ்.ஐ.ஆர் பணி நடைபெற்ற போது, பாஜகவின் கூட்டணியில் இடம் பெற்ற ஐக்கிய ஜனதா தளம் வழக்கு தாக்கல் செய்யவில்லை. பாஜக கூட்டணியில் இடம்பெற்ற ஆந்திர மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சி எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை ஆதரித்து வழக்கு போடவில்லை. மாறாக, இஸ்லாமியர்களின் குடியுரிமையைச் சோதிக்கும் வகையில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் பயன்படுத்த கூடாது என்று கவலை தெரிவித்துள்ளது. ஆனால், ‘அடிமை சேவை செய்வதே என் தவ வாழ்க்கை’ என வாழ்ந்து கொண்டிருக்கும் பழனிசாமி, எஸ்.ஐ.ஆர்-ஐ ஆதரித்தோடு வழக்கு போட்டு ராஜ விஸ்வாசத்தைக் காட்டுவது வெட்கக்கேடு.
மக்களைப் பற்றியும் மக்கள் நலனைப் பற்றியும் துளியும் கவலையில்லாமல் டெல்லி எஜமானர்களின் மனம் குளிர மட்டுமே அடிமை சேவகம் செய்து வரும் பழனிசாமி தனது கட்சியை அடமானம் வைத்தது மட்டுமின்றி, தமிழர்களின் வாக்குரிமையை பறித்து தமிழ்நாட்டை டெல்லியின் அடிமையாக்க முயல்கிறார். இந்த அற்ப செயலுக்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி அளிப்பார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் மீது கொஞ்சமும் அக்கறை இல்லாத அதிமுக, தமிழர்களின் வாக்கு உரிமையை பற்றியா கவலைப்படும்?
