Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவிலேயே சண்டிகருக்கு அடுத்து கோவையில்... செமி கண்டக்டர் பூங்காக்களால் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பு: பொருளாதாரமும் மேம்படும் என தொழில் துறையினர் நம்பிக்கை

கோவை அருகே செமிகண்டக்டர் இயந்திரத் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படுவதால், பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகள் மேம்படும் என தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கோவை மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக சூலூர் மற்றும் பல்லடம் ஆகிய பகுதிகளில் தலா 100 ஏக்கர் பரப்பளவில் செமி கண்டக்டர் இயந்திரத் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தொழில் துறையினரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

தினசரி பயன்படுத்தப்படும் கார்கள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், போன்கள் உள்ளிட்ட சாதனங்களை இயக்கும் மைக்ரோ சிப்களை தயாரிப்பது செமி கண்டக்டர் என அழைக்கப்படுகிறது. செமி கண்டக்டர் இல்லாமல் மின்னணு சாதனங்களை தயாரிக்க முடியாது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த செமி கண்டக்டர் தயாரிப்பிற்கு பெரிய அளவிலான எதிர்காலம் உள்ளது. இவற்றை தயாரிக்க மிக அதிக சுத்தம், அறிவு, கவனம், பொருள் செலவு, பண முதலீடு உள்ளிட்டவை தேவை.

இதனால் செமி கண்டக்டர் துறையில் சில நாடுகளே ஆதிக்கம் செலுத்தும் நிலையில், அத்துறையில் தமிழ்நாடும் தடம் பதிக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கமர்சியல் செமி கண்டக்டர் தயாரிப்பு ஆலைகள் வெகு சொற்பமாகவே இருக்கிறது என்பதால் பெரும்பாலும் சீனா, தைவான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அந்த செமி கண்டக்டர் பூங்கா அமைக்கப்படுவதால், நாட்டின் பொருளாதாரம் உயர்வது மட்டுமின்றி, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கல்லூரி பேராசிரியர் சரவணன் கூறுகையில், ‘‘இந்தியாவில் செமி கண்டக்டர் தயாரிப்பு என்பது சண்டிகரில் மட்டும்தான் உள்ளது. அதுவும் அரசுக்கு தேவையான சிப்புகளை மட்டுமே தயாரித்து வருகின்றனர். வணிக தயாரிப்புகள் இல்லை. இந்த நிலையில் செமி கண்டக்டர் பார்க் சூலூர், பல்லடம் பகுதிகளில் அமைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் இத்துறை சார்ந்து தமிழ்நாட்டில் படிப்பதற்கும் இதர மாநிலங்களில் படிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

தமிழ்நாட்டில் செமி கண்டக்டர் தயாரிப்பு ஆலைகள் இல்லாததால், மாணவர்கள் படிக்கும்போது நேரடியாக அதனை பார்த்து தெரிந்து கொள்ள முடியாமல் போனது. இத்தகைய சூழலில் அந்த பூங்காக்கள் நிறுவப்பட்டால் இங்குள்ள மாணவர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டு தெரிந்து கொள்வார்கள். இதற்கான பாடத்திட்டத்தை தொழில்துறையினருடன் இணைந்து உருவாக்கலாம். எனவே இந்த துறையில் படிக்கும் மாணவர்கள் தொழிலுக்கு புதிதாக சேரும்போது அவர்களுக்கு பயிற்சி தேவைப்படாது.

நேரடியாக பணிக்கு சேர்ந்து பணியாற்றலாம்’’ என தெரிவித்தார். எலக்ட்ரானிக்ஸ் ரோபோட்டிக்ஸ் துறையில் பணியாற்றும் முகமது அகமதுல்லா கூறுகையில், ‘‘செமி கண்டக்டர் என்பது ஒரு மெட்டீரியல். இந்த காலத்தில் பல்வேறு பொருட்கள் எலக்ட்ரானிக்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கோவையில் இது போன்ற ஒரு பூங்கா வருவது தொழில் துறையினருக்கு உதவியாக இருக்கும்.

இந்த செமி கண்டக்டர் என்பது மின்சார வாகனம் போன்று எலக்ட்ரானிக் பொருட்கள் இருக்கும் இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் புது புது கண்டுபிடிப்புகள் உருவாக்கப்படலாம். அதுமட்டுமின்றி, மருத்துவம், சைபர் செக்யூரிட்டி, ஏஐ, ஆட்டோ மிசின் போன்ற பல்வேறு துறைகளில் பயன்படும், அந்த துறையும் வளரும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இந்தியாவில் இருக்கக்கூடிய இன்ஜினியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லாமல் இங்கேயே பணியமர்த்தப்படலாம்’’ என்றார்.