மும்பை: ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் ஆகிய செல்போன்களை கடந்த 9ம் தேதி அறிமுகம் செய்தது. இந்தியாவில் ஐபோன் 17 சீரிஸ் விற்பனை நேற்று துவங்கியது. ஒவ்வொரு முறையும் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் வெளியாகும் போது, வாடிக்கையாளர்கள் உற்சாக மிகுதியில் ஷோரூமில் குவிந்து, செல்போன்களை வாங்கிச் செல்வார்கள்.
அதேபோன்று தான் நேற்றும் நாடு முழுவதும் மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஐபோன் ஷோரூம்களில் மக்கள் ஐபோன் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். துவக்க விலை ரூ.82,900 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மும்பையில் உள்ள ஆப்பிள் ஷோரூமுக்கு, நேற்று முன்தினம் மாலையிலேயே வாடிக்கையாளர்கள் வரத் துவங்கிவிட்டனர்.
முதல் நாளிலேயே ஐபோனை வாங்கிச் செல்ல வேண்டுமென இரவு முழுக்க ஷோரூம் முன்பு காத்திருந்தனர். பின்னர் ஐபோன் விற்பனை துவங்கியதை அடுத்து செல்போன் மற்றும் கேட்ஜெட்களை வாங்கிச் சென்றனர். இந்த ஷோரூமில் ஒரே நேரத்தில் பலர் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு, அடிதடி ஏற்பட்டது.