Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

தரக்குறியீடு இல்லாத நகர்ப்புற விரிவாக்கம்; இந்தியாவில் சாலை விபத்துகளால் ஆண்டுக்கு 1.68 லட்சம் உயிரிழப்புகள்: ஒரு மணி நேரத்திற்கு 19 பேர் பலி

ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் ‘சர்வதேச அளவில் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கான நினைவு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினமானது 1993ம் ஆண்டில் சாலை அமைதி நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்ெவாரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது. சாலை விபத்துகளில் பலியானோர், படுகாயம் அடைந்தோரை நினைவு கூர்ந்து அதை தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த வகையில் நடப்பாண்டில் நவம்பர் 16ம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சர்வதேச அளவிலும், இந்தியாவிலும் விபத்துகள் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு சராசரியாக 4.6 லட்சம் சாலை விபத்துகள் நடக்கிறது. அதனால் 1.68 லட்சம் உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. சராசரியாக, ஒரு மணி நேரத்திற்கு 53 விபத்துகள் நடக்கிறது. இதில் 19 உயிர் இழப்புகள் ஏற்படுகிறது என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முந்தைய 10 ஆண்டுகளில் 100 விபத்துகளுக்கு 28 என்று இருந்த உயிரிழப்புகள், தற்போது 100 விபத்துகளுக்கு 36 என்ற அளவில் அதிகரித்துள்ளது. நகர்ப்புற விரிவாக்கம், நீண்டதூர பயணம், கார் பயன்பாடு அதிகரிப்பு, தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் அதிகரித்தல் போன்றவை, விபத்துகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய போக்குவரத்து நலமேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் நகர்ப்புற விரிவாக்கம் அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப சாலைவிபத்துகளும் அதிகரித்து வருகிறது. பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோரே அதிகளவில் சாலை விபத்துகளால் பாதிக்கப்படுகின்றனர். 53சதவீதம் இந்தியர்கள், நகர்ப்புறங்களில் வசிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இதனால் மக்களின் பயணநேரம் அதிகரித்துள்ளது. அதாவது குறிப்பாக நகர்ப்புறங்களில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியரும் ஏதாவது ஒரு வகையில், தினமும் சராசரியாக 2மணி நேரமாவது பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நகரங்கள் விரிவுபடுவதால் தேசியநெடுஞ்சாலைகள் ெபரும்பாலும் நகர்ப்புற சாலைகளாகவே மாறி வருகிறது.

இவ்வாறு மாறுதலுக்கு உள்ளாகும் சாலைகள், நகர்ப்புற தரக்குறியீடுகளின் படி உருவாக்கப்படுவதில்லை. இந்த சாலைகளில் பாதசாரிகள் கடந்து செல்வதற்கான வழிகள், சிக்னல்கள் இல்லாத நிலையில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிறது. இதன்காரணமாகவே சாலையை கடக்கும் போது விபத்துகள் ஏற்படுகிறது. உடனடியாக வந்து மீட்டுச்செல்வதற்கான சூழல்களும் பெரும்பாலும் இருப்பதில்லை. இதனால் உயிரிழப்புகள் நிகழ்கிறது. இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் கடந்த 10ஆண்டு​களில் 60% வளர்ச்சி​யடைந்துள்ளது. 2014ல் 91,287 கி.மீ. ஆக இருந்த தேசிய நெடுஞ்​சாலைகள், 2024வரை 1,46,145 கி.மீ. ஆக விரிவாக்கம் செய்யப்​பட்​டுள்ளன. குறிப்பாக, நான்கு வழிச்​சாலைகள் 2014ல் 18,371 கி.மீ. தூரம் இருந்த நிலையில், 2024வரை 48,422 கி.மீ. ஆக அதிகரித்​துள்ளன.

விரிவடையும் சாலைகளுக்கு ஏற்ப உரிய சாலைப் பராமரிப்பு இல்லாத சூழலில் சாலை விபத்தில் இறப்பு​களும் அதிகரித்​திருப்​பதைப் புள்ளி​விவரங்கள் தெரிவிக்​கின்றன. 2024ல் சாலை விபத்து மூலமான இறப்புகள் தேசிய நெடுஞ்​சாலைகளில் 36%, மாநில நெடுஞ்​சாலைகளில் 24% என்று பதிவாகி உள்ளது. சாலைகளின் கட்டமைப்பு ஒரு புறம் இருந்தாலும் மனித தவறுகளும் இதற்கு முக்கிய காரணமாகிறது. குறிப்பாக பொறுப்பற்ற முறையில் வாகனங்களை ஓட்டுவது இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே சாலைப் பயனர்கள் பயன்படுத்தும் வாகனங்​களின் இயக்கம், வடிவமைப்பு, பராமரிப்பு-பாதுகாப்பு போன்ற அம்சங்​களைக் கண்காணித்து அவற்றின் தரநிலையை உறுதிப்​படுத்த வேண்டும்.

கிராமம், நகரம் என்று அனைத்துபகுதி மக்களையும் சாலை விபத்து தொடர்பான விழிப்பு​ணர்வு சென்றடைவதை உறுதிப்​படுத்தவேண்டும். சாலை விபத்துகள் ஏற்படுத்தும் இழப்பின் தீவிரத்தை உணர்ந்து, அதைத் தவிர்ப்​ப​தற்கான அனைத்து முயற்சி​களிலும் மத்திய, மாநில அரசுகள் ஒருங்​கிணைந்து செயலாற்ற வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

5 ஆண்டுகளில் அதிக விபத்துகள்

கடந்த 5 ஆண்டு​களில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்​களில் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்து​களும், உயிரிழப்பு​களும் ஏற்பட்​டுள்ளன. இந்த காலக்​கட்​டத்தில் இந்தியா முழுவதும் சாலை விபத்தில் 7.77 லட்சத்​துக்கும் அதிகமானோர் உயிரிழந்​திருப்​ப​தாகச் சாலைப் போக்கு​வரத்து-நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்​துள்ளது. இதில், உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 1,08,882 பேரும், தமிழ்​நாட்டில் 84,316 பேரும், மகாராஷ்டிரத்தில் 66,370 பேரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 58,580 பேரும், கர்நாடகத்தில் 53,448 பேரும் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

55 கிலோ மீட்டராக குறைக்க வேண்டும்

‘‘இந்தியாவில் நான்குவழி நெடுஞ்​சாலைகளில், வாகனங்​களுக்கான வேக வரம்பு மணிக்கு 80 கிலோமீட்டர் என்று நிர்ணயிக்​கப்​பட்​டுள்ளது. ஆனால், உலக சுகாதார அமைப்பு நான்குவழிச் சாலைகளின் வேகத்தை மணிக்கு 55கிலோ மீட்டர் முதல் 57 கிலோ மீட்டராக குறைப்பதன் மூலம் உயிரிழப்பைத் தடுக்க முடியும் எனப் பரிந்துரைக்​கிறது. இத்தகைய ஆலோசனை​களைப் பரிசோதனையாக அரசு முயன்று பார்க்க வேண்டும். இதேபோல் நீண்ட தூரத்​திலிருந்து வாகனத்தை ஓட்டிவரும் ஓட்டுநர்​களின் சோர்வை நீக்கும் வகையில் நெடுஞ்​சாலைகளில் ஆங்காங்கே ஓய்வு நிலையங்​களை​யும், விபத்துகள் ஏற்பட்டால் மருத்துவ வசதி அளிக்கும் மையங்​களையும் அமைப்பதன் மூலம் சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் கணிசமாகக் குறைக்க முடியும்,’’ என்பதும் போக்குவரத்து ஆர்வலர்களின்

அறிவுறுத்தல்.

அதிக வேகமே முதல் காரணம்

பொதுவாக மனிதத் தவறுகள், பாதுகாப்பற்ற சாலைகள், மோசமான வாகனப் பராமரிப்பு, அதிவேகம் உள்ளிட்ட பல்வேறு காரணி​களால் சாலை விபத்துகள் ஏற்படு​கின்றன. 2024ல் மட்டும் இந்தியா முழுவதும் 4,61,312 சாலை விபத்துகள் ஏற்பட்டன. 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024ல் அதிக வேகத்தால் ஏற்படும் விபத்துகள் 12.8% ஆகவும், அதனால் ஏற்படும் இறப்புகள் 11.8% ஆகவும் காயமடையும் நிகழ்வுகள் 15.2% ஆகவும் அதிகரித்​துள்ளன. சாலையில் தவறான பக்கத்தில் வாகனம் ஓட்டிச் செல்வதும் விபத்து ஏற்பட 9சதவீதம் காரணமாகிறது. கனமழை, மூடுபனி போன்ற வானிலை நிகழ்வு​களும் விபத்துகள் ஏற்பட வழிவகுக்​கின்றன என்பதும் ஆய்வுகள் வெளிப்படுத்தும் தகவல். எனவே சாலை விபத்​துக்கு முதன்மைக் காரணமாக உள்ள அதிவேகப் பயணத்தைக் கட்டுப்​படுத்த கடுமையான நடவடிக்கை தேவை என்பதும் கோரிக்கையாக உள்ளது.