நியூயார்க்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து மியான்மர் அகதிகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறும் ஐநா நிபுணரின் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்துள்ளது. மியான்மரில் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிபுணர் தாமஸ் ஆண்ட்ரூஸ், மியான்மரின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஐநாவில் தாக்கல் செய்துள்ள தனது அறிக்கையில், ‘‘ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் இந்து சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து மியான்மரை சேர்ந்த அகதிகள் இந்தியாவில் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகி உள்ளனர். மியான்மரை சேர்ந்த யாரும் தாக்குதலில் ஈடுபடவில்லை என்றபோதிலும், சமீபத்திய மாதங்களில் இந்திய அதிகாரிகளால் அவர்கள் அழைக்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு, நாடு கடத்தப்படுவதாக அச்சுறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஐநா பொதுச்சபையின் மூன்றாவதுகுழுவில் நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட இந்திய எம்பி திலிப் சைகியா கூறுகையில், ‘‘எனது நாடு தொடர்பான அறிக்கையில் உள்ள ஆதாரமற்ற மற்றும் பாரபட்சமான அவதானிப்புக்களுக்கு நான் கடுமையான ஆட்சேபனை தெரிவிக்கிறேன். சிறப்பு அறிக்கையாளரின் இத்தகைய பாரபட்சமான ஆய்வை இந்தியா நிராகரிக்கிறது. உலக இஸ்லாமிய மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதமான 200மில்லியனுக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து மதத்தை சேர்ந்த மக்களும் வாழும் இந்தியாவை அவதூறு செய்வதை மட்டுமே நோக்கமாக கொண்ட சரிபார்க்கப்படாத மற்றும் திரித்து கூறப்பட்ட ஊடக அறிக்கைகளை நம்பியிருக்க வேண்டாம் என்று ஐநா நிபுணரை நான் வலியுறுத்துகிறேன்” என்றார்.
இதேபோல் இந்திய எம்பி புரந்தேஸ்வரி சர்வதேச அணுசக்தி அறிக்கை குறித்த ஐநா பொதுச் சபை கூட்டத்தில் பேசுகையில்,‘‘இந்தியா ஒரு வலுவான அணுசக்தி பாதுகாப்பு கலாசாரத்தையும், குறைபாடற்ற பாதுகாப்பு சாதனையையும் கொண்டுள்ளது. அணுசக்தி மற்றும் கதிரியக்க பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே நேரத்தில் மின்சாரம் மற்றும் மின்சாரம் அல்லாத துறைகளில் அணு தொழில்நுட்பத்தின் அமைதியான பயன்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் இந்தியா உறுதிபூண்டுள்ளது” என்றார்.
 
  
  
  
   
