350% வரி விதிக்கப்படும் என்று எச்சரித்து இந்தியா- பாக். போரை நிறுத்தினேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் புது தகவல்
நியூயார்க்: இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் போரை நிறுத்தாவிட்டால் இரு நாடுகளுக்கும் 350% வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தேன் என்றும் நாங்கள் போருக்கு செல்லவில்லை என்று மோடி கூறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் தீவிரவாத முகாம் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் 4 நாட்களில் முடிவுக்கு வந்தது.
போர் நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதலை உதவியது நான் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப்,60 முறைகளுக்கு மேல் கூறிவிட்டார். இந்த நிலையில்,சவுதி இளவரசர் முகமது பின் சுல்தானுடன் அமெரிக்க-சவுதி முதலீட்டு மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பேசுகையில்,‘‘ அணு ஆயுதங்களை வைத்துள்ள 2 அண்டை நாடுகளுக்கு இடையே போர் நடந்தது.
அப்போது நான் ஒவ்வொரு நாட்டிற்கும் 350% வரி விதிக்கப்போகிறேன். அமெரிக்காவுடன் இனி வர்த்தகம் இல்லை என்று அறிவிக்க போகிறேன் என்றேன். பின்னர் நீங்கள் அதை செய்ய வேண்டாம் என்று இந்தியாவும், பாகிஸ்தானும் கேட்டு கொண்டன. நீங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்தி லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே அணு துகள்கள் மிதப்பதை நான் அனுமதிக்க மாட்டேன் என்றேன். போரை நிறுத்தினால் நல்ல வர்த்தக ஒப்பந்தம் செய்யலாம் என்று கூறினேன். இதை போன்று வேறு எந்த அதிபரும் செய்திருக்க மாட்டார்கள்.
போர்கள் அனைத்தையும் தீர்க்க நான் வரிகளைப் பயன்படுத்தினேன். எட்டுப் போர்களில் ஐந்து வர்த்தகம், வரிகள் காரணமாக தீர்க்கப்பட்டன. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் என்னை அழைத்து, வெள்ளை மாளிகையின் தலைமைத் தளபதி சூசி வைல்ஸ் முன்னிலையில், லட்சக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதற்காக நன்றி தெரிவித்தார். பிரதமர் மோடியிடம் இருந்து அழைப்பு வந்தது. நாங்கள் முடித்து விட்டோம் என்றார். ‘நீங்கள் எதை முடித்துவிட்டீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு பதிலளித்த மோடி ,நாங்கள் போருக்குச் செல்லப் போவதில்லை என தெரிவித்தார் என்றார்.
* மம்தானி- டிரம்ப் சந்திப்பு
அமெரிக்காவின் நியூயார்க் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸோரன் மம்தானியை இன்று சந்திக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் தெரிவித்தார். அமெரிக்கா, நியூயார்க் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியும் முதல் இஸ்லாமியா மேயரான ஸோரன் மம்தானி வெற்றிபெற்றார். அவர் ஜனவரி 1ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.மேயர் தேர்தலில் மம்தானி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை டிரம்ப் கூறி வந்தார். இந்த நிலையில் இன்று மம்தானியை நேரில் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.


