Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியா - பாகிஸ்தான் இடையே துபாயில் போட்டி; தீவிரவாத தாக்குதலுக்கு நடுவே கிரிக்கெட்டா?: ஒன்றிய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

புதுடெல்லி: கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் தீவிரவாதிகள், ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடத்திய தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலுக்கு மத்தியில், துபாயில் இன்று (செப். 14) நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கு அனுமதி அளித்த ஒன்றிய அரசு மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) கட்சி, மகாராஷ்டிரா முழுவதும் போராட்டங்களை அறிவித்துள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலகிற்கு உணர்த்த, இந்தப் போட்டியை புறக்கணிப்பது நல்லது என்று அக்கட்சி கூறியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் சவுரவ் பரத்வாஜ், இந்தப் போட்டிக்கு அனுமதி அளிப்பதன் மூலம், பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை ஒன்றிய அரசு அவமானப்படுத்துகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், ‘ரத்தமும், தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது’ என்ற ஒன்றிய அரசின் கொள்கையைச் சுட்டிக்காட்டி, ஒன்றிய அரசின் இரட்டை நிலைப்பாட்டையும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள பிசிசிஐ, இருதரப்பு தொடர்களுக்கு மட்டுமே தடை நீடிப்பதாகவும், ஆசிய கோப்பை போன்ற பல நாடுகள் பங்கேற்கும் தொடர்களில் விளையாட அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், அதன்படியே தாங்கள் செயல்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிசிசிஐ தரப்பில் ‘மறைமுக புறக்கணிப்பை’ அரங்கேற்றுவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் பிசிசிஐ-யின் மூத்த நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

இந்த சர்ச்சை, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. சிலர் போட்டியைப் புறக்கணிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், மற்றவர்கள் விளையாட்டையும் அரசியலையும் பிரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். சமூக வலைதளங்களில் இந்தப் போட்டிக்கு எதிராகவே பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். #BoycottIndvsPak போன்ற ஹேஷ்டேக்குகள் பரவலாக டிரெண்டாகி வருகின்றன.