பெர்த்: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி சுப்மன் கில் தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கு, அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகளில் இந்தியா ஆடி வருகிறது. பெர்த் நகரில் நேற்று முதல் ஒரு நாள் போட்டி நடந்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா மோசமாக ஆடி 8 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.
அவரைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி, 8 பந்துகளை ஆடி ஒரு ரன் கூட எடுக்காமல் மிட்செல் ஸ்டார்க் பந்தில் பிலிப்பிடம் கேட்ச் தந்து நடையைக் கட்டினார். பின் கேப்டன் சுப்மன் கில் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். இடையில் பல முறை மழை குறுக்கிட்டதால், போட்டி 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 26 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் 11, அக்சர் படேல் 31, கே.எல்.ராகுல் 38, வாஷிங்டன் சுந்தர் 10, ஹர்சித் ராணா 1, அர்ஷ்தீப் சிங் 0 ரன் எடுத்து அவுட்டாகி இருந்தனர். நிதிஷ் ஆட்டமிழக்காமல் 19 ரன் எடுத்தார்.
ஆஸி தரப்பில், ஜோஷ் ஹேசல்வுட், மிட்செல் ஓவன், மேத்யூ குனெமான் தலா 2 விக்கெட் எடுத்தனர். மழை பாதிப்பால், டிஎல்எஸ் முறைப்படி ஆஸி, 26 ஓவரில் 131 ரன் எடுத்தால் வெற்றி என நிர்ணயிக்கப்பட்டது. அதையடுத்து ஆஸி துவக்க வீரர்களாக கேப்டன் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். ஹெட் 8 ரன்னும், பின் வந்த மேத்யூ ஷார்ட் 8 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜோஷ் பிலிப் சிறப்பாக ஆடி 37 ரன் எடுத்தார்.
துவக்க வீரர் மார்ஷ் 46 ரன்னும், மேட் ரென்ஷா 21 ரன்னும் ஆட்டமிழக்காமல் எடுத்து பட்டையை கிளப்பினர். அதனால், 21.1 ஓவரில், 29 பந்துகள் மீதமிருக்கையில் ஆஸி, 3 விக்கெட் மட்டுமே இழந்து, 131 ரன் எடுத்து மகத்தான வெற்றியை பதிவு செய்தது. இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ஆட்ட நாயகனாக ஆஸி கேப்டன் மிட்செல் மார்ஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியை அடுத்து, 1-0 என்ற கணக்கில் ஆஸி, இத்தொடரில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த ஒரு நாள் போட்டி வரும் 23ம் தேதி, அடிலெய்ட் நகரில் நடக்கவுள்ளது.