Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏமனில் இன்னும் 5 நாளில் மரண தண்டனை கேரள நர்சின் உயிர் தப்புமா? ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை விசாரணை

புதுடெல்லி: கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த 35 வயதான நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார். அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். நிமிஷா, 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். மருத்துவமனையில் வருவாய் அதிகரிக்க மஹ்திக்கும், நிமிஷாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து பாஸ்போர்ட்டை பெற அதிக அளவு மயக்க மருந்து செலுத்தியதில் மஹதி பலியானார். இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் துண்டுதுண்டாக்கப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் சுமார் ஒரு மாதம் கழித்து சவுதி அரேபியாவை ஒட்டிய ஏமன் எல்லையில் நிமிஷா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2020ஆம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. ஜூலை 16ஆம் தேதி நிமிஷா பிரியாவுக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் நிமிஷாவைக் காப்பாற்ற உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஜூலை 14 ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டதுடன் இதுபற்றி ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை குறித்து விளக்க அளிக்கும்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் ஜாய்மல்யா பாக்சி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

* கடைசி வாய்ப்பு என்ன?

தற்போது ஏமனின் சனா நகரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நிமிஷா. அவரால் மரணம் அடைந்த தலால் அப்தோ மஹ்தியின் குடும்பம் மன்னிப்பு வழங்கினால் மட்டுமே நிமிஷா மரண தண்டனையில் இருந்து தப்பிக்கலாம். இதுதான் நிமிஷாவுக்கு இப்போது இருக்கும் கடைசி வாய்ப்பு ஆகும். ஏனெனில் ஏமன் நாட்டில் இஸ்லாம் மதத்தின் ஷரியா சட்டம் அமலில் உள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்டவரின் (தலால் அப்தோ மஹ்தி) குடும்பம் மன்னிப்பு அளித்தால், நிமிஷாவின் தண்டனை ரத்து செய்யப்படும். அந்த மன்னிப்பிற்கு ஈடாக ‘ப்ளட் மணி’ (Blood money) அல்லது தியா (Diyah) எனப்படும் நஷ்டஈடு (பெரும்பாலும் பணம்) வழங்கப்படும்.