ஜூனாகட்: குஜராத் மாநிலம் ஜூனாகட் நகரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் நிலக்கடலை ஆராய்ச்சி இயக்குநரகத்தை ஒன்றிய அமைச்சர் சவுகான் நேற்று பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த லட்சாதிபதி பெண்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார். அதன் பின்னர் சிவ்ராஜ்சிங் கூறுகையில்,‘‘ இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் லட்சாதிபதியாக மாற்ற பிரதமர் மோடி உறுதி பூண்டுள்ளார்.
ஒரு பெண் ஏன் ஏழையாக இருக்க வேண்டுமா? இதற்காக லாக்பதி தீதி(லட்சாதிபதி பெண்) என்ற பிரசாரம் இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.லட்சாதிபதி பெண் என்பது ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் அல்லது அதற்கு மேல் வருமானம் ஈட்டும் சுய உதவிக் குழுவின் பெண் உறுப்பினர் ஆகும். இதுவரை, 1.5 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக மாறிவிட்டனர். மேலும் ஆகஸ்ட் 15 ம் தேதிக்குள் 2 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.