புதுடெல்லி: “நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் பாஜ அரசு கவனம் செலுத்தி வருகிறது” என பிரதமர் மோடி கூறி உள்ளார். ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 51 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, “ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு புதிய பொறுப்புகள் தொடங்குகின்றன. இளைஞர்களுக்கு வெவ்வேறான பொறுப்புகள் இருந்தாலும், அவர்களின் பொதுவான குறிக்கோள் முதலில் குடிமகன் என்ற எண்ணத்தால் வழி நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
இந்தியா இரண்டு ஒப்பற்ற சக்திகளை கொண்டுள்ளது என்பதை உலகம் ஒத்து கொள்கிறது. நாடு கடந்த 11 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளது. இந்திய இளைஞர்களின் வலிமை அவர்களின் மூலதனம். நாட்டின் பிரகாசமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம்” என்று தெரிவித்தார்.


