Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு இளைஞர்கள் மீது அன்பு செலுத்துவதாக ஒன்றிய அரசு வார்த்தை ஜாலம் காட்டுகிறது: மக்களவையில் துரை வைகோ கடும் தாக்கு

சென்னை: நாடாளுமன்ற மக்களவையில் நேற்று ஒன்றிய அரசின் பட்ஜெட் விவாதத்தில் கலந்து கொண்டு திருச்சி தொகுதி எம்.பி துரை வைகோ பேசியதாவது: நாட்டின், இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு இருந்தாலும், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.37,907 கோடி வெள்ள நிவாரணம் கேட்டு பல முறை கடிதங்கள் அனுப்பிய நிலையில், அதுவும் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகும் வெறும் ரூ.276 கோடியை மட்டுமே ஒன்றிய அரசு தந்துள்ளது. மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட ஒன்றிய அரசு, பிற மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்காக ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் ஒதுக்கியுள்ளது. இதற்குக் காரணம் தமிழ்நாடு தந்தை பெரியார் மற்றும் அண்ணாவின் தேசம் என்பதனாலா?

ஒன்றிய பட்ஜெட்டில் எம்.ஆர்.டி.எஸ் மற்றும் மெட்ரோ திட்டங்களுக்கு ரூ.24,932 கோடி ஒதுக்கப்பட்டாலும், சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டம் மதுரை மற்றும் கோவையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெட்ரோ திட்டங்கள் பற்றி குறிப்பிடப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது. சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத்திற்கான செலவு ரூ.63,000 கோடியில், தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருந்தாலும் ரூ.21,000 கோடியை ஒதுக்கியுள்ளது. ஆனால், ஒன்றிய அரசு இதுவரை ஒரு பைசா கூட தரவில்லை. தமிழகம், பாஜகவிற்கு ஒரு இடம் கூட தராதது இதற்குக் காரணமா?. தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாநகரத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை.

கடந்த 10 ஆண்டுகளாக, ஒன்றிய அரசு இந்திய இளைஞர்கள் மீது அன்பு செலுத்துவதாக வார்த்தை ஜாலம் காட்டுகிறதே தவிர உண்மையான அக்கறையை அவர்கள் மீது கொண்டிருக்கவில்லை. அதிகரித்து வரும் கல்விக் கடன்கள், வேலையின்மை மற்றும் தவறான கல்வி முறை ஆகியவற்றால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 10,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஒன்றிய அரசு அதன் கூட்டணிக் கட்சிகளை திருப்திப்படுத்தவே இந்த பட்ஜெட்டை வடிவமைத்துள்ளது. ஒன்றிய அரசு அரசியல் எல்லைகள் மற்றும் சித்தாந்தங்களைக் கடந்து சாமானியர்களுக்கும், இந்த மகத்தான நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.