Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குற்றவியல் சட்டங்கள் பற்றி 40 லட்சம் கடைநிலை ஊழியர்கள், 5 லட்சம் போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி: வரும் 1ம் தேதி முதல் நடைமுறை

புதுடெல்லி: ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து 40 லட்சம் கடைநிலை ஊழியர்கள், 5.65 லட்சம் போலீசார் மற்றும் சிறைத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா 2023 (இந்திய நீதிச் சட்டம்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 (இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம்), பாரதிய சாக்ஷயா அதினியம் 2023 (இந்திய சாட்சியச் சட்டம்)ஆகியவற்றுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து நடைமுறையில் உள்ள இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றான புதிய சட்டங்கள் ஜூலை 1 ம் தேதி முதல் அமலாகிறது.

புதிய சட்டங்கள் குறித்து கடைநிலை ஊழியர்கள், போலீசார் மற்றும் சிறை துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், புதிய குற்றவியல் சட்டங்கள், விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக,தேசிய குற்ற ஆவண காப்பகம், குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் மற்றும் அமைப்புகளில் 23 செயல்பாட்டு மாற்றங்களை செய்துள்ளது. புதிய நடைமுறைக்கு மாறுவதற்காக,மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப உதவியையும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வழங்குகிறது.திறன் மேம்பாட்டிற்காக, போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம்(பிபிஆர்டி) பயிற்சிகளை நடத்தியுள்ளது. பிபிஆர்டி அமைப்பு சார்பில் 250 பயிற்சி வகுப்புகள்,கருத்தரங்குகள், இணையவழி கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன.

இதில் 40,317 அதிகாரிகள், பணியாளர்கள் பங்கேற்றனர்.மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களில் காவல்துறை, சிறை துறை அதிகாரிகள் 5.65 லட்சம் பேர் உட்பட பல துறைகளை சேர்ந்த 5.84 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. புதிய கிரிமினல் சட்டங்கள் பற்றி கர்மயோகி பாரத் மற்றும் பிபிஆர்டி 3 பயிற்சி வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் 2.27 லட்சம் அதிகாரிகள் சேர்ந்துள்ளனர். சட்டங்கள் மூலம் கொண்டு வரப்படும் சீர்திருத்தங்கள் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மீது ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கம் பற்றி அறிந்திருப்பதை உறுதி செய்யும் விதமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகங்களின் மூலம் இணைய வழி கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. இதில்,கடை நிலை ஊழியர்கள் 40 லட்சம் பேர் பங்கேற்றனர்.

சட்ட விவகாரங்கள் துறை மாநிலங்களின் தலைநகரங்களில் 4 மாநாடுகளை நடத்தியது. இதில், உச்சநீதிமன்ற நீதிபதிகள்,தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்ட நிபுணர்கள் உட்பட பல துறைகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர் என தெரிவித்தன.

ஆன்லைனில் புகார்

புதிய சட்டங்களின்கீழ் பாதிக்கப்பட்ட நபர்கள் நேரடியாக போலீஸ் நிலையத்திற்கு செல்லாமல் ஆன்லைன் மூலம் நடந்த சம்பவத்தை பற்றி புகார் அளிக்க முடியும். ஜீரோ எப்ஐஆர் என்ற அடிப்படையில் ஒருவர் எந்த ஒரு இடத்திலும் இருந்தும் புகார் அளிக்கலாம். வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு பாதிக்கப்பட்ட நபர் எப்ஐஆர் நகலை இலவசமாக பெறுவார். சட்டத்தின் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கைதானவர்கள் தங்களுடைய நிலைமை குறித்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தகவல் அளிக்க உரிமை உண்டு.