Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிராபிக் பைன் மெசேஜ் வந்தால் உஷார் போலியாக லிங்க் அனுப்பி லட்சக்கணக்கில் சுருட்டல்: வாரணாசி கும்பலை வளைத்த கொச்சி போலீஸ் தமிழ்நாட்டிலும் கைவரிசை காட்டியது அம்பலம்

திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகா, குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க முக்கிய சாலைகளில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

வாகன உரிமையாளர்களின் செல்போனில் அபராதம் குறித்த விபரம் எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கப்படும். தபாலில் செலானும் அனுப்பி வைக்கப்படும். வாகன உரிமையாளர்கள் செல்போனில் தங்களுக்கு வரும் லிங்கை பயன்படுத்தி அபராத தொகையை கட்டலாம். இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வாகன உரிமையாளர்களுக்கு போலி பரிவாகன் லிங்க் அனுப்பி மோசடி நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஒரு வாகன உரிமையாளர் தன்னுடைய செல்போனில் வந்த போலி பரிவாகன் செயலியில் கிளிக் செய்து ரூ.85 ஆயிரத்தை பறி கொடுத்தார். இதுகுறித்து அவர் கொச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் போலி பரிவாகன் லிங்க் அனுப்பியது உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த கும்பல் என தெரியவந்தது.

இதையடுத்து கொச்சி போலீசார் வாரணாசிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையில் அதுல்குமார் சிங் (32) மற்றும் மனிஷ் யாதவ் (24) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் டெலிகிராம் போட் என்ற செயலியின் மூலம் வாகனத்தின் விவரங்களை சேகரித்துள்ளனர்.

இவர்களிடம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 2,700க்கும் அதிகமான வாகனங்களின் விவரங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் உறவினரான 16 வயதான சிறுவன் தான் பரிவாகனின் போலி செயலியை உருவாக்கி உள்ளான் என்று போலீசார் தெரிவித்தனர். இருவரையும் வாரணாசியில் இருந்து இன்று கேரளாவுக்கு போலீசார் அழைத்து வருகின்றனர்.