Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருப்பதியில் 9 நாட்கள் ஆர்ஜித சேவை, விஐபி தரிசனம் ரத்து ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது: 7 லட்சம் லட்டுகள் தயார்

திருமலை: ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் இன்று கொடிஏற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி 65 கவுன்டர்களில் 7 லட்சம் லட்டுகள் விற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று செயல் அதிகாரி ஷியாமளா ராவ் கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து செயல் அதிகாரி ஷியாமளா ராவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் 4ம் தேதி (இன்று) கொடியேற்றத்துடன் தொடங்கும்.

தொடர்ந்து, வரும் 12ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. இந்த ஒன்பது நாட்களில் 16 வாகனங்களில் சுவாமி உற்சவமூர்த்திகள் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். இதனையொட்டி கோயிலில் நடைபெறக்கூடிய அனைத்து ஆர்ஜித சேவைகளும், சிறப்பு முன்னுரிமை தரிசனங்களும், விஐபி தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரமோற்சவ விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் லட்டு பிரசாதம் கிடைக்க 7 லட்சம் லட்டுகள் நிலுவை இருக்கும் விதமாக தயார் செய்து பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கூடுதலாக 11 கவுன்டர்கள் அமைத்து மொத்தம் 65 கவுன்டர்கள் மூலம் லட்டு பிரசாதம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1,250 தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் 3,009 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 2,700 சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும். திருமலையில் 24 இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு 200 கழிவறைகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு செல்லும் வரிசைகள், வைகுண்டம் காத்திருப்பு அறைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் தொடர்ந்து அன்ன பிரசாதம், குடிநீர், பால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை தெரிந்து கொள்வதற்காக இலவச தொலைபேசி எண் 155257 பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் 400 பஸ்கள் கொண்டு 2000 ட்ரிப் தினந்தோறும் திருப்பதி திருமலை இடையே இயக்கப்படும். தொடர்ந்து, தரிகொண்ட வெங்கமாம்பா அன்ன பிரசாத கூடத்தில் காலை 7 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி அன்று பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால் அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளும், நீச்சல் வீரர்கள் கொண்ட தேசிய மற்றும் மாநில பேரிடர் வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.