Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இங்கிலாந்து போர் விமானத்தின் கோளாறு சரி செய்யப்பட்டது: இன்று புறப்பட்டு செல்ல வாய்ப்பு

திருவனந்தபுரம்: எரிபொருள் குறைவு மற்றும் எந்திரக் கோளாறு காரணமாக கடந்த மாதம் திருவனந்தபுரம் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இங்கிலாந்து போர் விமானத்தின் கோளாறு சரி செய்யப்பட்டது. இதையடுத்து இன்று இந்த விமானம் இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் 14ம் தேதி இந்திய பசிபிக் கடலில் விமானம் தாங்கி கப்பலில் இருந்து வழக்கமான போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எப்35 பி ரக போர் விமானத்தால் மோசமான காலநிலை காரணமாக மீண்டும் கப்பலில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. நீண்ட நேரம் வானில் வட்டமிட்டு பறந்ததால் அந்த விமானத்தில் இருந்த எரிபொருள் குறையத் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இந்த போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தரையிறங்கும் போது விமானத்தின் ஹைட்ராலிக் செயல்பாட்டில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து கடலில் நிறுத்தப்பட்டிருந்த இங்கிலாந்து ராணுவத்தின் விமானம் தாங்கி கப்பலில் இருந்த 2 இன்ஜினியர்கள் உடனடியாக திருவனந்தபுரம் வந்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய முயற்சித்தனர். ஆனால் அவர்களால் பழுது பார்க்க முடியவில்லை.

இதனால் கடந்த இரு வாரங்களுக்கு முன் இங்கிலாந்தில் இருந்து 14 இன்ஜினியர்கள் அடங்கிய ஒரு குழுவினர் திருவனந்தபுரம் வந்தனர். பல நாள் முயற்சிக்குப் பின்னர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த போர் விமானம் நேற்று விமானங்களை பழுது பார்க்கும் மையத்திலிருந்து ஓடுபாதைக்கு கொண்டு வரப்பட்டது. இன்று இந்த போர் விமானம் இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்லும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே திருவனந்தபுரம் விமானநிலையத்தில் 39 நாட்கள் நிறுத்தி வைத்ததற்காக பார்க்கிங் கட்டணமாக ரூ. 8 லட்சத்திற்கு மேல் இங்கிலாந்து அரசு செலுத்த வேண்டும். ஒரு நாளுக்கான பார்க்கிங் கட்டணம் ரூ. 26,261 ஆகும். இது தவிர விமானத்தை தரை இறக்கியதற்கான கட்டணத்தையும் செலுத்தினால் மட்டுமே இங்கிலாந்து போர் விமானத்தால் திருவனந்தபுரத்தில் இருந்து செல்ல முடியும்.