மூட்டை, மூட்டையாக பணம் சிக்கிய விவகாரம்: நீதிபதி வர்மாவை பதவி நீக்கம் செய்ய 200 எம்பிக்கள் நோட்டீஸ்: நாடாளுமன்றத்தில் தாக்கல்
புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூட்டை மூட்டையாக எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் குழு அமைத்து விசாரிக்கிறது. ஆனாலும், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதன்படி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியதும், நீதிபதி வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை கொண்டு வரக் கோரி 200க்கும் மேற்பட்ட எம்பிக்கள் இரு அவைகளிலும் நோட்டீஸ் கொடுத்தனர். நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான குழுவை அமைக்க அரசியலமைப்பு சட்டப்பிரிவு 218(1பி), பிரிவு 218, பிரிவு 214, துணைப்பிரிவு 4, பிரிவு 31பி ஆகியவற்றின் கீழ் தரப்பட்ட நோட்டீசில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜவின் ரவிசங்கர் பிரசாத், அனுராக் தாக்கூர், என்சிபி தலைவர் சுப்ரியா சுலே, திமுகவின் டி.ஆர்.பாலு உள்ளிட்ட 145 எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இதே போல மாநிலங்களவையில் 63 எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவை செயலாளருக்கு அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார்.