திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் (28), போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த வழக்கை சிபிஐ டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். ஜூன் 27ம் தேதி இரவு குற்றப்பிரிவு போலீசார், அஜித்குமாரை திருப்புவனம் நான்கு வழிச்சாலையில் உள்ள பேக்கரியில் வைத்து விசாரணை செய்துள்ளனர். இதையடுத்து கடந்த 19ம் தேதி, சிபிஐ அதிகாரிகள் இந்த பேக்கரிக்கு சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கில் அஜித்குமார் சென்ற தனிப்படை வாகனத்தின் டிரைவரான போலீஸ்காரர் ராமச்சந்திரனிடம் நீண்ட நேரம் விசாரித்தனர். நேற்று முன்தினம் பேக்கரியில் உள்ள 4 சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள ஜூன் 27ம் தேதி காட்சிகளை சிபிஐ அதிகாரிகள் சேகரித்தனர். சிபிஐ குழுவினரில் இருவர் நேற்று மாலை மீண்டும் அந்த பேக்கரியில் விசாரணை நடத்தினர். அப்போது, பேக்கரி ஊழியர்களிடம், எவ்வளவு நேரம் போலீசார் பேக்கரியில் இருந்தனர்? அப்போது விசாரணை செய்தனரா, இல்லையா என கேட்டனர்.