தெலங்கானாவில் சாக்லெட் கம்பெனி நடத்தி வரும் சென்னை தொழிலதிபர் வீட்டில் பதுக்கிய ரூ.950 கோடியை கொள்ளையடிக்க முயற்சி: 14 பேர் கும்பல் அதிரடி கைது
திருமலை: சாக்லெட் கம்பெனி நடத்தி வரும் சென்னை தொழிலதிபர் வீட்டில் ரூ.950 கோடியை கொள்ளையடிக்க முயன்ற 14 பேரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் பிராமணப்பள்ளியை சேர்ந்தவர் போகினிஜங்கையா, ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது நண்பர்கள் மன்சூராபாத்தை சேர்ந்த சேகர், எம்.டி.மைமூத்து. சேகர் ஓட்டுநராகவும், மைமூத்து மணல் வியாபாரியாகவும் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டனர். இந்நிலையில் துர்க்கையஞ்சல் ஸ்ரீராம்நகரில் வசிக்கும் சென்னையை சேர்ந்த சாக்லெட் நிறுவன உரிமையாளர் திருமணந்துரை என்பவரின் வீட்டில் கணக்கில் வராத ரூ.950 கோடி பதுக்கியுள்ளதாக போகினி ஜங்கையாவுக்கு ஒரு நபர் மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. இதனை ஜங்கையா தனது நண்பர்களிடம் கூறினார்.
இதையடுத்து ஜங்கையா உள்பட 3 பேரும் சேர்ந்து ரூ.950 கோடியை கொள்ளையடிப்பது என்றும், அதற்கு பதிலாக அந்த இடத்தில் கருப்பு பேப்பரை வைக்கவும் திட்டமிட்டனர். கடந்த 10ம்தேதி நள்ளிரவு திருமணந்துரை வீட்டுக்குள் நுழைந்தனர். 2 வாட்ச்மேன்களை தாக்கி கட்டிப்போட்டுவிட்டு வீட்டிற்குள் புகுந்தனர். சத்தம் கேட்டு தொழிலதிபர் திருமணந்துரை, அவசர போலீஸ் எண் 100க்கு தகவல் கொடுத்தார். உடனே ஆதிபட்லா போலீசார் விரைந்து வந்தனர். இதையறிந்த 14 பேர் கும்பல் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த விவரங்களின்படி தலைமறைவாக இருந்த போகினி ஜங்கையா உட்பட 14 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்கள் வந்த 3 கார்கள், ஒரு ஸ்கூட்டி, 16 செல்போன்கள், இரும்பு கட்டர்கள், இரும்பு கம்பிகள், கருப்பு காகித மூட்டைகள், ரசாயனங்கள் மற்றும் ரூ.80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.