திருமலை: இரண்டு குழந்தைகளின் தந்தையான 42 வயது வேன் டிரைவரும், 22 வயது மாணவியும் காதலித்து வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். பின்னர் தங்களை பிரித்துவிடுவார்களோ என அஞ்சி தற்கொலை செய்துகொண்டனர். தெலங்கானா மாநிலம் வாரங்கல் எனுமாமுலா இந்திரம்மா பகுதியை சேர்ந்தவர் சுவாமி (42), வேன் டிரைவர். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். எதிர்வீட்டில் வசிப்பவர் காயத்ரி (22), கல்லூரி மாணவி. எதிர் எதிர் வீட்டில் வசிப்பதால் இருவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சுவாமிக்கு மனைவி, குழந்தைகள் இருப்பதை அறிந்தும் காயத்ரி நெருங்கி பழகியுள்ளார்.
இதையறிந்த காயத்ரியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து மகளை கண்டித்தனர். இதேபோல் சுவாமியின் மனைவியும் தனது கணவரை கண்டித்து வந்தார்.
இதுதொடர்பாக கடந்த 6 மாதங்களுக்கு முன் காயத்ரியின் பெற்றோர் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டனர். இதையடுத்து சுவாமி வீட்டை காலி செய்துகொண்டு குடும்பத்துடன் ஹன்மகொண்டா பகுதிக்கு குடிபெயர்ந்தார். இருப்பினும் காயத்ரியுடன் தொடர்பில் இருந்தார். இந்நிலையில் கடந்த 2ம்தேதி காயத்ரி, தனது வீட்டில் இருந்த 14 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை எடுத்துக்கொண்டு திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் வாரங்கல் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் காயத்ரியும், சுவாமியும் வீட்டைவிட்டு வெளியேறி வேமுலவாடா பகுதியில் திருமணம் செய்துகொண்டு அன்னாராம்ஷெரீப் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் காயத்ரி கொண்டு வந்த நகை, பணம் அனைத்தையும் விற்று செலவு செய்துவிட்டனர்.
செலவுக்கு பணம் இன்றி தவித்தனர். மேலும் தங்களை பிரித்து விடுவார்களோ என அச்சமடைந்த அவர்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளனர். சுவாமி இறந்துவிட்ட நிலையில் காயத்ரி உயிருக்கு போராடினர். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை வாரங்கல் எம்ஜிஎம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையறிந்த அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அப்போது தனது தந்தையிடம் காயத்ரி, `நான் செய்தது தவறுதான். என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள். நான் இறக்க விரும்பவில்லை’ என கதறிஅழுதுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி காயத்ரி நேற்று இறந்தார்.