வலுவான கூட்டணி ஆட்சி இருக்கிறது பொது சிவில் சட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவோம்: ஒன்றிய சட்ட அமைச்சர் பேச்சு
கொல்கத்தா: ‘‘ஒன்றியத்தில் வலுவான கூட்டணி அரசு இருப்பதால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்’’என ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறி உள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ‘குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கான பாதை’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் நேற்று பங்கேற்று பேசியதாவது:
பாஜ தேர்தல் அறிக்கையில், பொது சிவில் சட்டத்தை பற்றி குறிப்பிட்டுள்ளோம். கோவா, உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே இச்சட்டத்தை செயல்படுத்த தொடங்கி உள்ளன. ஒன்றியத்தில் வலுவான கூட்டணி அரசு அமைந்துள்ளதால் கவலைப்பட ஒன்றுமில்லை. வாக்குறுதிப்படி பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவோம். தேர்தல் என்பது ஜனநாயகத்தின் முக்கிய அங்கம். எந்த ஒரு தேர்தல் முடிந்த பிறகும் எந்த வன்முறையும் இருக்கக் கூடாது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.இவ்வாறு அவர் கூறினார்.