Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

17 மாநிலத்தில் 265 மாவட்டங்களில் 14,000 குழந்தை திருமணங்கள் தனியார் தொண்டு நிறுவனங்களால் தடுத்து நிறுத்தம்

புதுடெல்லி: தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் வெளியிடப்பட்ட இந்திய குழந்தைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி குழுவின் அறிக்கையின்படி, 2023-24ம் ஆண்டில் பஞ்சாயத்து நிர்வாகங்களின் உதவியுடன் மொத்தம் 59,364 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், குழந்தை திருமணத்திற்கு உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகங்களே பொறுப்பேற்க வேண்டுமென உத்தரவிட்டதன் விளைவாக, அக்ஷய திருதியை நாளில் பதிவான குழந்தை திருமண வழக்குகளில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 2023-2024ம் ஆண்டில் நாடு முழுவதும், 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 265 மாவட்டங்களில் உள்ள 161 சிவில் சமூக அமைப்புகள் சட்டரீதியான தலையீடுகள் மூலம் 14,137 குழந்தை திருமணங்களை தடுத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம், கடந்த 5 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட மொத்த குழந்தை திருமண வழக்குகளின் எண்ணிக்கையானது (3,863), ஒரு நாளில் நடந்த பெண் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கையை விட (4,442) குறைவு என்கிற அதிர்ச்சித் தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, கடந்த 2022ம் ஆண்டில் கடத்தப்பட்ட அல்லது மீட்கப்பட்ட 63,513 குழந்தைகளில், 15,748 (25 சதவீதம்) பேர் திருமணம் அல்லது உடலுறவு நோக்கத்திற்காக கடத்தப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 2022ல் மீட்கப்பட்ட 15,142 குழந்தைகள் திருமணத்திற்காக மட்டுமே கடத்தப்பட்டுள்ளனர். குழந்தை திருமண வழக்குகளை தீர்ப்பதற்கு விரைவு நீதிமன்றங்கள் வேண்டும், தண்டனை இரட்டிப்பாக்கப்பட வேண்டும், கற்பழிப்புக்கான குற்றச் சதிக்கு சமமாக கருதப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.