12 முதல் 17 சதவீதம் வரை பிளாஸ்டிக் உற்பத்தியை குறைத்தால் காலநிலை மாற்ற பாதிப்பை தடுக்கலாம்: அமெரிக்க ஆய்வில் தகவல்
புதுடெல்லி: அமெரிக்காவை சேர்ந்த லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகமானது கார்பன் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தற்போதைய பிளாஸ்டிக் உற்பத்தி சதவீதமானது காலநிலை மாற்றத்துக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. பிளாஸ்டிக் உற்பத்தியின்போது பயன்படுத்தப்படும் எரிபொருளை எரிப்பதன் மூலமும், அப்போது வெளிப்படும் வெப்பம் மூலமும் வெளியேறும் வாயுகள் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
இந்த உமிழ்வுகளில் சுமார் 75 சதவீதம் பிளாஸ்டிக் உருவாகாத முன்பே நிகழ்கிறது. எரிபொருட்களை எரிப்பது வளிமண்டலத்தில் க்ரீன் ஹவுஸ் வாயுக்களின் அளவு அதிகரிப்பதற்கு முதன்மை காரணமாகும். இது உலக வெப்பநிலையை உயர்த்துகிறது. காலநிலை மாற்றத்தில் மிக மோசமான பாதிப்புக்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கான பாரிஸ் உடன்படிக்கையால் நிர்ணயிக்கப்பட்ட 1.5டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரம்பை மீறுவதை தவிர்ப்பதற்கு 2024ம் ஆண்டு தொடங்கி பிளாஸ்டிக் உற்பத்தியானது ஆண்டுக்கு 12 முதல் 17 சதவீதம் வரை குறைய வேண்டும். இல்லையென்றால் 1.5டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரம்பை அடைவது தாமதமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.