Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மழையால் வரத்து குறைந்தது பழங்கள், காய்கறிகளின் விலை அதிரடி உயர்வு

உடுப்பி: மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழையால் வரத்து குறைவு ஏற்பட்டு, பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் தற்போது பெய்து வரும் மழையால், பல தரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், உடுப்பி மாவட்டத்தில், சில்லறை சந்தையில் காய்கறிகள் விலை சற்று குறைந்தாலும், பழங்கள், காய்கறிகளின் விலை உயர்ந்து, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் ரூ.70க்கு விற்ற ஏலக்கி வாழைப்பழ விலை கிலோ ரூ.90 என உள்ளது. நேந்திர வாழைத்தார் கிலோ ரூ.60ல் இருந்து ரூ.70 ஆக உயர்ந்தது.

கடலோர பகுதிகளில் ஏலக்கி வகை பழத்துக்கு அதிக தேவை உள்ளது. வழிபாடு போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்த வாழைப்பழம் பயன்படுகிறது. இதனால், விலை உயர்ந்தாலும், வாங்க வேண்டிய நிலை பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. ஆப்பிள் விலை ஒரு கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை நிலையானது. ஆனால் மல்லிகா மாம்பழத்தின் விலை கிலோ ரூ.180 என அதிகரித்துள்ளது. இதே பழம், கடந்த வாரம் சுமார் ரூ.160 என இருந்தது. நீலம் மாம்பழத்தின் விலை ரூ.110 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.80 ஆக இருந்தது. ரம்புட்டான் கிலோ ரூ.400ல் இருந்து ரூ.440 என உயர்ந்துள்ளது.

கிவி பழம் ஒரு பெட்டியின் விலை ரூ.140. கடந்த வாரம் இதன் விலை ரூ.100 ஆக இருந்தது. அதேபோல் பப்பாளி விலையும் கிலோ ரூ.40ல் இருந்து ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், பெரும்பாலான பழங்களின் விலை அதிகரித்துள்ளது. ஆனால் டிராகன் பழம், பேரிக்காய் விலை குறைந்துள்ளது. டிராகன் பழம் கிலோவுக்கு கடந்த வாரம் ரூ.200ல் இருந்து ரூ.100 ஆக குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.160 ஆக இருந்த பேரிக்காய் விலை தற்போது ரூ.140 ஆக குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக அனைத்து இடங்களிலும் மழை பெய்தாலும் சில காய்கறிகளின் விலை குறைந்துள்ளதால், மக்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் கிலோ ரூ.60 இருந்த பீன்ஸ் விலை ரூ.50 ஆக குறைந்துள்ளது. கிலோ ரூ.60 இருந்த அலசண்டை ரூ.50க்கு, கிலோ ரூ.120 ஆக இருந்த திவி பலா ரூ.100 எனவும், முட்டைகோஸ் கிலோ ரூ.45ல் இருந்து ரூ.40 எனவும் குறைந்துள்ளது. கீரை விலையில் மாற்றம் இல்லை. ஆனால் தக்காளி விலை கடந்த வாரம் கிலோ ரூ.60 என இருந்து ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக, சந்தைகளில் பெரும்பாலான காய்கறிகளின் விலை அதிகரித்ததன் காரணமாக, வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகள் வாங்க வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என வியாபாரிகள் கூறுகின்றனர்.