திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் 31ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கிடையே இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளா முழுவதும் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் மழை மேலும் தீவிரமடையும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றும், நாளையும் கோட்டயம், பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி ஆகிய மூன்று மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் 204 மிமீக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பிருக்கும் பகுதிகளுக்குத் தான் ரெட் அலர்ட் விடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் 3 நாட்களுக்கு திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 21ம் தேதி பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு ஆகிய 5 மாவட்டங்களுக்கும், 22ம் தேதி பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வரும் 31ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.