Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சின்னத்தால் சரிந்த வாக்குகள்; ‘கார்’ சின்னத்தை காலி செய்தது ‘சப்பாத்தி கட்டை’- தேர்தல் ஆணையத்தில் பிஆர்எஸ் கட்சி பகீர் புகார்

ஐதராபாத்: எங்களது கட்சியின் ‘கார்’ சின்னத்தை காலி செய்தது ‘சப்பாத்தி கட்டை’ போன்ற சுயேட்சை சின்னங்கள் தான் என்று தேர்தல் ஆணையத்தில் பிஆர்எஸ் கட்சி பகீர் புகார் அளித்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி தோல்வியடைந்து ஆட்சியை இழந்ததற்கு, தங்களது கட்சியின் ‘கார்’ சின்னத்தைப் போலவே இருந்த மற்ற சின்னங்கள்தான் முக்கிய காரணம் என்று அக்கட்சி குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக, சுயேட்சை சின்னங்கள் பட்டியலில் இருந்த ‘சப்பாத்தி கட்டை’, ‘கேமரா’, ‘கப்பல்’ போன்ற சின்னங்கள், தங்களது கார் சின்னத்தைப் போலவே இருந்ததால், வாக்காளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டதாகவும், இதனால் தங்களுக்கு விழ வேண்டிய வாக்குகள் சிதறி, பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்ததாக பிஆர்எஸ் கட்சி தொடர்ந்து கூறி வந்தது.

இரண்டு முறை தெலங்கானாவில் ஆட்சி அமைத்து, மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தங்களை, தந்திரமான முறையில் தோற்கடிக்க எதிரணியினர் இந்த சின்னக் குழப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டதாக அக்கட்சி கூறி வருகிறது. இந்த நிலையில், கடந்த கால தவறு மீண்டும் நிகழாமல் தடுக்கும் நோக்கில், பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர்களான போனிபள்ளி வினோத் குமார் மற்றும் சோமா பரத் குமார் ஆகியோர், ஐதராபாத்தில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணையரை நேற்று நேரில் சந்தித்தனர். அப்போது மாநில ஆணையரிடம் புதிய மனுவை தாக்கல் செய்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், ‘எங்களது கார் சின்னத்தைப் போலவே தோற்றமளிக்கும் குழப்பமான சின்னங்களை, சுயேட்சை சின்னங்கள் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள், வருகிற சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் இந்த சின்னங்களால் மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளோம்’ என்று கூறினார். பிஆர்எஸ் கட்சியின் இந்த புகார், தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.