கழிவறையில் ரத்தக்கறை படிந்திருந்த விவகாரம்; தனியார் பள்ளி மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை: மும்பையில் நடந்த கொடூரம்
தானே: மும்பையில் உள்ள தனியார் பள்ளி கழிவறையில் ரத்தக்கறை படிந்திருந்த விவகாரம் தொடர்பாக மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை அடுத்த தானே அருகே சாகாப்பூரில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள கழிவறையில், நேற்று முன்தினம் ரத்தக்கறை படிந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பள்ளி ஆசிரியைகளிடம் கூறப்பட்டது. உடனே இந்த சம்பவத்துக்கு காரணம் யார் என்பதை கண்டறிய 5 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கூட்ட அரங்கத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்களிடம் கேட்டபோது, யாரும் உண்மையை ஒப்புக்கொள்ளாததால், 5 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவிகள் பலரை கழிவறைக்கு அழைத்து சென்று நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் வீடு திரும்பியதும் பெற்றோரிடம் கூறினர். ஆத்திரமடைந்த பெற்றோர்கள், நேற்று பள்ளிக்கு சென்று, சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீதும் பள்ளி நிர்வாகம் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர். மேலும் போலீசில் புகாரும் அளித்தனர். அதன் பேரில் பள்ளி முதல்வர், ஆசிரியைகள், பெண் உதவியாளர் மற்றும் அறங்காவலர்கள் உள்பட 8 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.